நாமக்கல் அருகே வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட கல்லூரி மாணவி சடலமாக மீட்பு

சேந்தமங்கலம் : நாமக்கல் அருகே வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவி சடலமாக மீட்கப்பட்டார்.நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே சிங்களகோம்பை பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி கவிதா. இவர்களது இளைய மகள் ஜீவிதா(18). இவர், திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றார்.

மாலை கல்லூரி முடிந்து பேருந்தில் சிங்களகோம்பைக்கு ஜீவிதா வந்தார். அங்கிருந்த தாய் கவிதா, டூவீலரில் மகளை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது, சிங்களகோம்பை கொக்குப்பாறை ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்துச் சென்றது. இதையடுத்து, டூவீலரை நிறுத்திவிட்டு கவிதா, ஜீவிதா ஆகியோர் ஓடை பகுதியில் நடந்து சென்றுக்கொண்டிருந்தனர். திடீரென தண்ணீர் அதிகளவு வந்ததால் இருவரும் ஓடையில் அடித்துச் செல்லப்பட்டனர்.

அப்போது, கையில் சிக்கிய முட்புதர்களை பிடித்துக்கொண்டு போராடிக்கொண்டிருந்த கவிதாவை அங்கிருந்தவர்கள் மீட்டனர். ஆனால், ஜீவிதா தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சென்னை பேரிடர் மீட்புக்குழுவினர் 15க்கும் மேற்பட்டோர் மற்றும் நாமக்கல் தீயணைப்பு துறை வீரர்கள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் ஜீவிதாவை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், அவர் கிடைக்கவில்லை. மேலும், இரவு நேரம் ஆனதால் தேடும் பணி கைவிடப்பட்டது. தொடர்ந்து நேற்று காலை தேடும் பணி நடந்தது. அப்போது, சிங்களகோம்பை ஏரியில் ஜீவிதா சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Related Stories: