ரயில் மோதி 2 பெண் யானை பலியான விவகாரம் பாலக்காடு மண்டல பொதுமேலாளர் நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கஞ்சிக்கோடு-வாளையாறு ரயில் வழித்தடத்தில் ரயில் மோதி, 2 பெண் யானைகள் பலியானது குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி பாலக்காடு ரயில்வேமண்டல பொது மேலாளருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. யானைகள் பாதுகாப்பது தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் சதீஷ்குமார்,பரத சக்கரவர்த்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, 14ம் தேதி கஞ்சிக்கோடு-வாளையாறு இடையே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 பெண் யானைகள் ரயில் மோதியதில் பலியாகியுள்ளன. காயமடைந்த குட்டி யானையை காணவில்லை.

இதுசம்பந்தமாக தெற்கு ரயில்வே பாலக்காடு மண்டல பொது மேலாளர் நவம்பர் 24ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும். யானைகள் வழித்தடத்தின் வழியாக செல்லும் ரயில்களின் வேகத்தை குறைக்க சாத்தியமில்லை என்று பாலக்காடு மண்டல பொறியாளர் அளித்த அறிக்கை அறிவியல் ஆய்வு அடிப்படையானதல்ல. யானைகள் வழித்தடங்களில் ரயில்களின் வேகத்தைக் குறைத்து விபத்துக்களை தடுப்பது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும். ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 24ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: