வேலூர்-ஆற்காடு சாலையில் மீண்டும் ஆக்கிரமிப்பு; முடிவுக்கு வராத போக்குவரத்து நெரிசல்: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி

வேலூர்: வேலூர்-ஆற்காடு சாலையில் மீண்டும் மீண்டும் முளைக்கும் ஆக்கிரமிப்புகளால் தினமும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு முடிவு காணப்படாமல் தங்களை மனஉளைச்சலுக்கு ஆளாக்குவதாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டியுள்ளனர். வேலூர் மாநகரின் மத்தியில் அமைந்துள்ள ஆற்காடு சாலை பிரபல தனியார் மருத்துவமனையை ஒட்டி செல்கிறது. இம்மருத்துவமனைக்கு நாள்தோறும் வரும் ஆயிரக்கணக்கான நோயாளிகள், அவர்களை சார்ந்தவர்களுக்காக ஆற்காடு சாலையில் மட்டுமின்றி அதை சுற்றியுள்ள காந்தி ரோடு, மெயின் பஜார், சுக்கையவாத்தியார் தெரு, லத்தீப்பாட்சா தெரு, மிட்டா ஆனந்தராவ் தெரு, பாபுராவ் தெரு, பேரி பக்காளி தெரு, பேரி சுப்பிரமணியசுவாமி கோயில் தெரு, காகிதப்பட்டறை, சைதாப்பேட்டை பிடிசி ரோடு மற்றும் அதன் அருகில் உள்ள தெருக்களில் லாட்ஜ்களும், விடுதிகளும், கடைகளும், வர்த்தக நிறுவனங்களும், ஓட்டல்களும் நிரம்பியுள்ளன.

இதனால் இந்த பகுதிகள் எப்போதுமே மக்கள் நெரிசலுடன், வாகன நெரிசலும் மிகுந்து காணப்படும். குறிப்பாக ஆற்காடு சாலையில் காலை 6 மணி தொடங்கி இரவு 10 மணி வரை போக்குவரத்து நெரிசல் என்பது மக்களையும், வாகன ஓட்டிகளையும் எரிச்சலடையும் வைக்கும் வகையிலேயே இருக்கும். இந்த நெரிசலுக்கு பிரதான காரணம் ஆக்கிரமிப்புகளே என்கின்றனர் பொதுமக்கள். ஆற்காடு சாலையை பொறுத்தவரை அதன் பழைய வரைபடத்தை வைத்து ஆக்கிரமிப்புகளை அகற்றினால் இருபுறமும் சுமார் 20 முதல் 30 அடி வரை தாராளமாக இடம் கிடைக்கும். தற்போதைய நிலையில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் தங்களின் இடத்தை தாண்டி ஆக்கிரமித்துள்ளன. அதற்கு மேல் நடைபாதை கடைகள் வேறு சாலையின் இருபுறமும் நிறைந்துள்ளது.

இதனால் 20 முதல் 25 அடியாக சுருங்கிப்போன சாலையில் வாகன ஓட்டிகள் செல்லவும், பொதுமக்கள் நடமாடவும் வேண்டய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக அவ்வபோது நாளிதழ்களில் படத்துடன் செய்தி வெளியானவுடன் போலீசாரும், மாநகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம் என்று களம் இறங்குகின்றனர். அன்றைய தினம் அல்லது ஓரிரு நாட்கள் மட்டுமே ஆற்காடு சாலையில் வாகனங்கள் தடையின்றி பயணிக்கும். ஆனால் மீண்டும் ஆக்கிரமிப்புகள் முளைத்து ஆற்காடு சாலை  போக்குவரத்து நெரிசலில் சிக்கித்திணறும். இந்த நிலையில் கடந்த வாரம் பேலஸ் சந்திப்பு தொடங்கி காகிதப்பட்டறை வரை இருபுறமும் இருந்த நடைபாதை கடைகள் அகற்றப்பட்டதுடன், கடைகள், வர்த்தக நிறுவனங்களின் அதிகப்படியான ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டன. மேலும் ஆட்டோக்களும், டாக்ஸிகளும் முறைப்படுத்தி நிறுத்தப்பட்டன.

அதை தொடர்ந்து மூன்று நாட்கள் ஆற்காடு சாலை நெரிலின்றி காட்சி அளித்தது. இந்நிலையில் நேற்று முதல் மீண்டும் ஆற்காடு சாலையில் பிளாட்பார கடைகள் முளைத்ததுடன், பேலஸ் சந்திப்பு தொடங்கி சைதாப்பேட்டை முருகன் கோயில் வரை கடைகள், வர்த்தக நிறுவனங்களும் தங்கள் ஆக்கிரமிப்பு கரங்களை அளவுக்கு மீறி அதிகரித்தன. மேலும் ஆட்டோக்களும், டாக்ஸிகளும், ஆம்புலன்ஸ் வாகனங்களும் தாறுமாறாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் ஆற்காடு சாலையில் கடந்த 2 நாட்களாக வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மீண்டும் புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே, வேலூர் மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் காவல்துறையுடன் இணைந்து ஆற்காடு சாலையில் சுலபமான போக்குவரத்துக்கு வழியேற்படுத்தும் வகையில் ஆக்கிரமிப்புகளை தயவுதாட்சண்யமின்றி அகற்றுவதுடன், மீண்டும் ஆக்கிரமிப்புகளை வைத்தால் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும் தயக்கம் காட்டக்கூடாது என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: