வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை: ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக அப்போது முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், தர்மயுத்தம் தொடங்கினார். அதன்பின்னர் எடப்பாடி பழனிச்சாமியும், பன்னீர்செல்வமும் சேர்ந்து ஆட்சி அமைத்த பிறகு, ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில் விசாரணை ஆணையம் தொடங்கப்பட்டது. இந்த ஆணையம், முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தனது அறிக்கையை அளித்தது. பின்னர் அமைச்சரவையில் இந்த அறிக்கை முன் வைக்கப்பட்டது. அமைச்சரவை ஒப்புதலுக்குப் பிறகு, அறிக்கை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

மொத்தம் 608 பக்கங்கள் கொண்ட அறிக்கையில் பரபரப்பு தகவல்கள் இடம் பெற்றுள்ளன. ஜெயலலிதா மரணத்தில் அவரது தோழி சசிகலா, உறவினர் சிவக்குமார், மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் குற்றம் செய்ததாக ஆணையம் முடிவு செய்து அவர்கள் மீது விசாரணைக்கு பரிந்துரைக்கப்படுவதாக, சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட ஜெயலலிதா மர்ம மரணம் குறித்த விசாரணை கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம்; வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை என கூறினார்.

Related Stories: