சேத்துப்பட்டு அடுத்த கோழிப்புலியூரில் கி.பி.16ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு

சேத்துப்பட்டு: சேத்துப்பட்டு அருகே உள்ள கோழிப்புலியூர் ஏரிக்கரையோரம் கிபி 16ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு தாலுகா, கோழிப்புலியூர் ஏரிக்கரையின்  கிழக்கில் பாறை ஒன்றில் எழுத்துக்கள் இருப்பதாக வரலாற்று ஆய்வாளர் செல்வகுமாருக்கு தகவல் தெரிய வந்தது. இதையடுத்து அவர் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் வரலாற்று ஆய்வாளர் செல்வகுமார் கூறியதாவது:

பாறையில் பார்த்த எழுத்துக்கள் செதுக்கிய இக்கல்வெட்டின் நீளம் 151 செ.மீ,, அகலம் 68 செ.மீ. பாறையின் மொத்த அகலம் 212 செமீ. கி.பி. 16ம் நூற்றாண்டுக்கும் 17ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இக்கல்வெட்டானது செதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அதில் ஏரிக்கு தானம் வழங்கியதாகவும், தர்மம் செய்ததாகவும் அந்த தர்மத்திற்கு தீங்கு விளைவிப்பவர் பாவம் தீர்க்க கங்கைக்கு போகவேண்டி வரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நம் முன்னோர்கள் ஏரி பராமரிப்பு, நீர்நிலைகளுக்கு பாதுகாப்பு என  ஆட்களை நியமித்து தான தர்மம் செய்துள்ளதையும் அவர்கள் பணியில் இறந்து விட்டால் வீரத்தைப்போற்றும் வகையில் வீர நடுகல் நட்டு வழிபடுவதும் வழக்கமாக இருந்ததற்கான தகவல்கள் வேறு இடங்களில் கண்டெடுத்த கல்வெட்டுகள் மூலம் தெரிய வருகிறது. அச்செய்திகள் இக்கல்வெட்டுடன் தொடர்புடையதாகவே இருக்கிறது.

இந்த ஊரில் கண்டெடுத்த கல்வெட்டு எழுத்துக்கள் தெளிவாக தெரிந்தாலும் சரியான பாடமின்றி நிறைய தவறுகளுடன் எழுதப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. இதுகுறித்து மேலும் ஆய்வு செய்தால் அரிய தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு செல்வகுமார் தெரிவித்தார். ஆய்வின்போது ஊராட்சி தலைவர் சந்தோஷ், கிராம நிர்வாக அலுவலர் முகமதுபஷீர், ஆசிரியர் பழனி மற்றும் உதவியாளர்கள் உடன் இருந்தனர்.

Related Stories: