ஸ்ரீவில்லிபுத்துார் நீதிமன்றத்தில் இருந்த தன் பாஸ்போர்ட்டை, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திரும்ப பெற்றார்

ஸ்ரீவில்லிபுத்துார்: உச்ச நீதிமன்ற உத்தர வின்படி, ஸ்ரீவில்லிபுத்துார் நீதிமன்றத்தில் இருந்த தன் பாஸ்போர்ட்டை, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திரும்ப பெற்றார். ஆவினில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த வழக்கில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உட்பட மூன்று பேர் மீது, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இவ்வழக்கில் கைதான ராஜேந்திர பாலாஜி, தன் பாஸ்போர்ட்டை, ஸ்ரீவில்லிபுத்துாரில் மக்கள் பிரதிநிதிகள் மீதான புகார்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைத்திருந்தார். வழக்கில் இடைக்கால ஜாமின் பெற்ற அவர், ஜாமின் நிபந்தனைகளை தளர்வு செய்யக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவருக்கு உச்ச நீதிமன்றம் செப். 12-ல் தளர்வுகள் வழங்கியதோடு, பாஸ்போர்ட்டை புதுப்பித்துக் கொள்ள அனுமதி வழங்கியது.

இதையடுத்து, ஸ்ரீவில்லிபுத்துார் நீதிமன்றத்தில் ஒப்படைத்த தன் பாஸ்போர்ட்டை திரும்ப தரக்கோரி, சில நாட்களுக்கு முன் அவர் மனு தாக்கல் செய்தார். விசாரித்த நீதிபதி வள்ளி மணாளன், உச்ச நீதிமன்ற உத்தரவின் படி பாஸ்போர்ட்டை பெற்று, மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை அதிகாரி வாயிலாக அதை புதுப்பித்து, உடனடியாக மீண்டும் நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

அதன்படி, நேற்று மதியம், 3.15 மணிக்கு ராஜேந்திர பாலாஜி ஸ்ரீவில்லிபுத்துார் நீதிமன்றத்திற்கு வந்தார். நீதிமன்ற அலுவலரிடம் பாஸ்போர்ட்டை பெற்று, மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராதிகாவிடம் ஒப்படைத்துள்ளார்.

Related Stories: