சென்னையில் மழைநீர் வடிகால் பணி 97 சதவீதம் நிறைவு: மேயர் பிரியா தகவல்

சென்னை: சென்னையில் 97 சதவீதம் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி முடிவு பெற்றுள்ளது. இன்னும் மூன்று சதவீத பணிகள் மட்டுமே நடைபெற வேண்டும் என மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார். உலக வீடற்றோர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மிதிவண்டி பேரணியை சென்னை மேயர் பிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார். சென்னை தீவுத் திடலில் நடந்த மிதிவண்டி பேரணியில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறுவர், சிறுமியர் பறை இசைத்து, கரகாட்டம் ஆடினர். பின்னர், மேயர் பிரியா அளித்த பேட்டி: சென்னை மாநகரில் வீடற்றோருக்காக 55 நகர்ப்புற வீடற்றோர் காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன.

ஆண்டுதோறும் அக்டோபர் 10ம் தேதி உலக வீடற்றோர் தினமாக கொண்டாடப்படும் நிலையில் வீடற்றோர் தினத்துக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அக்டோபர் 19ம் தேதி வரை நடக்கிறது. 2017ம் ஆண்டு முதல் வீடற்றோருக்கு காப்பகங்கள் செயல்படுகிறது. வீடற்றோர் காப்பகங்கள் மூலம் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன் அடைந்துள்ளனர்.  தன்னார்வ நிறுவனங்கள் உதவியுடன் மூன்று வேளை உணவு வழங்கப்படுகிறது. ஆனால் சாலையோரங்களில் வசிக்கும் சிலர் காப்பகங்களில் தங்களுக்கு சுதந்திரம் இல்லை என்று நினைத்து வெளியேறி விடுகின்றனர். தற்போது சென்னையில் உள்ள வீடற்றோருக்கான காப்பகங்களில் 30ஆயிரம் பேர் வரை தங்கி உள்ளனர். சிங்கார சென்னை திட்டத்தில் 97 சதவீத மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு பெற்றுவிட்டன. மூன்று சதவீத பணிகள் மட்டுமே நடந்து வருகிறது. இவ்வாறு கூறினார்.

Related Stories: