சசி தரூரை புறக்கணித்த தமிழக காங்கிரஸ் தலைமை மல்லிகார்ஜுன கார்கேவுக்கு மட்டும் தடபுடல் வரவேற்பா? வாக்கு சேகரிப்பதில் வெடித்தது கோஷ்டி பூசல், சர்ச்சையில் சிக்கிய தமிழக காங்கிரஸ்

சென்னை:  அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரான சசி தரூரை புறக்கணித்து விட்டு, மல்லிகார்ஜுன கார்கேவுக்கு மட்டும் தமிழக காங்கிரஸ் தலைமையே முன்னின்று தடபுடல் வரவேற்பளித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தமிழக காங்கிரஸ் தலைவர்களிடையே கோஷ்டி பூசலை உருவாக்கியுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல்காந்தி ஏற்க மறுத்துவிட்டதால், தேர்தல் மூலம் தலைவரை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கான வேட்பு மனு தாக்கல் முடிவடைந்து. இறுதியாக மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசிதரூர் ஆகியோரிடையே இருமுனை போட்டி ஏற்பட்டுள்ளது. எனவே, இருவரும் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று காங்கிரஸ் கட்சியினரிடையே வாக்கு சேகரித்து வருகின்றனர்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் சசிதரூர் மற்றும் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் வெவ்வேறு நாட்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இவர்களில் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு மட்டும் தமிழக காங்கிரஸ் தலைமை அளித்த சிறப்பான வரவேற்பு கட்சியினர் மத்தியில் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. ஏனெனில், சசி தரூர், ஆதரவு கேட்டு சென்னை வந்த போது காங்கிரஸ் நிர்வாகிகளில் பெரும்பாலானோர் கண்டு கொள்ளவே இல்லை. சென்னை விமான நிலையத்தில் சசி தரூரை பொதுச்செயலாளரும் ப.சிதம்பரம் ஆதரவாளருமான அருள் பெத்தையா மட்டுமே வரவேற்றார். பின்னர். சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு வந்த சசி தரூரை மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ஒருவர் கூட வரவேற்கவே இல்லை. சத்தியமூர்த்தி பவனுக்கு சசி தரூர் வருவதை தெரிந்து கொண்டே அவர்கள் அங்கு வருவதை தவிர்த்துள்ளனர். மகளிரணியினர் மற்றும் ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் மட்டுமே பவனில் இருந்தனர்.

இதனால் சசி தரூர் கடும் ஏமாற்றம் அடைந்தார். ஆனால் நேற்று சென்னை வந்த மல்லிகார்ஜூன கார்கேவின் வாக்கு சேகரிப்புக்கு மட்டும் பிரமாண்ட ஏற்பாடுகளை மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியே முன்னின்று செய்துள்ளார். இதனால் தமிழக காங்கிரஸ் முழுமையாக கார்கேவின் பின்னால் இருப்பதுபோன்ற தோற்றம் உருவாகியுள்ளது. கே.எஸ்.அழகிரி, ஒரு தரப்பிற்கு ஆதரவாக இருக்கும் நிலையில், ‘தமிழக காங்கிரஸ் கட்சியினர் மனசாட்சியுடன் வாக்களிக்க வேண்டும்’ என்று நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தமிழக காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதம் கட்சியினர் மத்தியில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஏனென்றால் அவர் எழுதியுள்ள கடிதத்தில்,‘‘ காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மற்றும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் எந்த ஒரு வேட்பாளருக்கும் வெளிப்படையாக ஆதரவு அளிக்கவில்லை.

போட்டியிடும் வேட்பாளர்கள் இடையே ஆரோக்கியமான போட்டி நடந்து வாக்காளிக்க தகுதி உடையவர்கள் தங்கள் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும் என்பது தான் அவர்களது விருப்பம். சோனியா காந்தி, ஏதோ ஒரு வேட்பாளரை மட்டும் விரும்புகிறார் என்று தவறாக சிலர் பரப்பி வருகிறார்கள். அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. வாக்களிக்க தகுதியுடைய காங்கிரசார் தங்கள் மனசாட்சிபடி வாக்களிக்க வேண்டும். நான் சசி தரூருக்கு எனது ஆதரவை தெரிவித்துக் கொண்டிருக்கிறேன். அவருக்கு வாக்களிக்க கேட்டுக் கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார். வரும் 17ம்தேதி நடைபெறும் தேர்தல் சுமூகமாக நடைபெறும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், தமிழக காங்கிரஸ் இரண்டாக பிரிந்திருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Related Stories: