ஆவினின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு ஆதாரமற்ற கருத்துக்களை பரப்பாதீர்: அமைச்சர் நாசர் கடும் கண்டனம்

சென்னை: ஆவினின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு ஆதாரமற்ற கருத்துக்களை பரப்ப வேண்டாம் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆவினில் நிறைய கொழுப்பு பால்(ஆரஞ்சு) உற்பத்தி குறைக்கப்படுவதாகவும், அதன் வினியோகத்தை நிறுத்தி சிவப்பு வண்ண பால் பாக்கெட்கள் (டீமேட்) விற்பனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது உண்மைக்கு புறம்பானது மற்றும் ஆவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவது. தற்போது தமிழ்நாடு முழுவதும்  நிறை கொழுப்பு பால் (ஆரஞ்சு)  சுமார் 10.83லட்சம் லிட்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கொழுப்பு பால்(ஆரஞ்சு) விற்பனை அளவை டீமேட் (சிவப்பு)  பால் விற்பனை அளவோடு ஒப்பிடுகையில் 0.3 சதவீதம் மட்டுமே டீமேட் பால் விற்பனை ஆகிறது. டீமேட் பால் முழுவதும் தேனீர் கடைகள் மற்றும் உணவகங்களின் கோரிக்கை அடிப்படையிலேயே பால் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டீமேட் பாலை வாங்குமாறு மக்களையோ, பால் விற்பனையாளர்களையோ நிர்ப்பந்தம் செய்வதில்லை. நிறை கொழுப்பு பால் ஆரஞ்சு சென்ற ஆண்டு 8.22 லட்சம் லிட்டர் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது அதன் விற்பனை 10.83 லட்சம் லிட்டாராக அதிகரித்துள்ளது.

எனவே நிறை கொழுப்பு பால் விற்பனை எந்த விதத்திலும் குறைக்கப்படவில்லை. மாறாக அதன் விற்பனை அதிகரித்தே உள்ளது. எனவே மேற்கண்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும், தன்னை முன்னிலை படுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு தொடர்ந்து ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயன்படுத்தும் ஆவின் பொருட்கள் மீதும், ஆவினின் நற்பெயருக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு உண்மைக்கு புறம்பான, ஆதாரமற்ற கருத்துக்களை தெரிவித்து வருவது கடும் கண்டனத்திற்கு உரியது என தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: