வாணியம்பாடியில் பரபரப்பு வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட திருநங்கைகள்-தங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை வழங்க கோரிக்கை

வாணியம்பாடி :  திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனர். திருநங்கைகளுக்கு குடியிருப்பு வசதியை ஏற்படுத்தி தரும் வகையில், தமிழக அரசு சார்பில் வளையாம்பட்டு கூத்தாண்டவர் கோயில் அருகே  மலையை ஒட்டி இடம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த இடத்தை, திருநங்கைகள் தங்கள் சொந்த பணம் ₹2 லட்சத்திற்கு மேலாக செலவு செய்து, அங்கே இருந்த புதர்கள் மற்றும் பாறைகளை அகற்றி, குடியிருப்புகள் கட்டுவதற்காக தயார் செய்து சீரமைத்துள்ளனர்.  

இந்நிலையில், அந்த இடம் வருவாய் துறைக்கு சொந்தமான இடம் இல்லை என்றும், கால்நடைத்துறைக்கு சொந்தமான இடம். எனவே திருநங்கைகளுக்கு அந்த இடம் ஒதுக்கப்படவில்லை. திருநங்கைகளுக்கு திம்மாம்பேட்டை அருகே உள்ள திகுவாபாளையம் பகுதியில் இடம் ஒதுக்கீடு செய்து பட்டா வழங்க தயார் நிலையில் உள்ளது என்று தற்போதுள்ள வட்டாட்சியர் சம்பத் திருநங்கைகளிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த திருநங்கைகள், வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வட்டாட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த விரைந்து வந்த, வாணியம்பாடி நகர போலீசார் திருநங்கைகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, திருநங்கைகளிடம் பேசிய வட்டாட்சியர் சம்பத், இது குறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட அளவிலான அதிகாரியிடம் பேசி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, திருநங்கைகள் முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு திருநங்கைகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: