ஆரணி அருகே சென்னை ஆயுதப்படை காவலர், பெண்ணுக்கு பேய் விரட்டுவதாக 3 நாளாக மாந்திரீக பூஜை: நரபலி கொடுக்க முயற்சியா என விசாரணை

ஆரணி: சென்னை ஆயுதப்படை காவலர் மற்றும் அவரது தங்கைக்கு பேய் விரட்டுவதாகக் கூறி 3 நாட்களாக கதவை பூட்டிக் கொண்டு பூஜை செய்த குடும்பத்தை போலீசார் அதிரடியாக கதவை உடைத்து மீட்டனர். நரபலி கொடுக்க முயற்சி நடந்ததா என விசாரணை நடந்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள தசராபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் தவமணி(55), விவசாயி. இவரது மனைவி காமாட்சி(45). இவர்களது மகன்கள் பூபாலன்(30), பாலாஜி(25), மகள் கோமதி(21). இவரது கணவர் பிரகாஷ்(29). பூபாலன் சென்னையில் ஆயுதப்படையில் போலீசாக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், கோமதிக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு பேய் பிடித்துள்ளது என கருதிய பெற்றோர் மற்றும் கணவர் வேலூரில் உள்ள ஒரு சாமியாரிடம் அழைத்துச்சென்றனர். பின்னர், மகளை தங்களது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து பூபாலனும் வீட்டிற்கு வந்தார். அப்போது பிரகாஷ், ‘எனது மனைவிக்கு பேய் பிடித்ததுபோல், மைத்துனர் பூபாலனுக்கும் பேய் பிடித்துள்ளது. சாமியாரிடம் மந்திரித்து, வீட்டில் ஒரு பூஜை செய்தால்தான் சரியாகும், குடும்பம் நன்றாக இருக்கும்’ என கூறினாராம்.

இதனால் இருவரையும் சாமியாரிடம் அழைத்து சென்றுள்ளனர். பின்னர் சாமியார் மந்திரித்து கொடுத்த பொருட்கள் மற்றும் தண்ணீர் ஆகியவற்றை வீட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். கடந்த 3நாட்களாக யாரும் வீட்டைவிட்டு வெளியே வரவில்லையாம். இந்நிலையில் நேற்று காலை பிரகாஷ், தனது தாய்க்கு போன் செய்து, `நீ அங்கிருந்தால் இறந்துவிடுவாய். நாங்கள் இங்கே பூஜை செய்ய உள்ளோம். இங்கே வந்துவிடு’ என கூறியுள்ளார். பின்னர் அனைவரும் உள்பக்கமாக வீட்டை பூட்டிக்கொண்டார்களாம். இதையடுத்து பிரகாஷின் தாயார் வீட்டிற்கு வந்துள்ளார். உள்ளே சென்று பார்த்தபோது அனைவரின் முகத்திலும் மஞ்சள், குங்குமம் பூசி கொண்டு, 4 பொம்மைகளை வைத்து பூஜை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து கேட்டபோது ஆத்திரமடைந்த தவமணியின் குடும்பத்தினர், பிரகாஷின் தாயாரை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிவிட்டு, வீட்டை பூட்டிக்கொண்டு மீண்டும் பூஜை செய்ய தொடங்கியுள்ளனர். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், கதவை திறக்கும்படி கூறியும் திறக்கவில்லை. உடனே பொதுமக்கள் ஆரணி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார் வீட்டின் கதவை திறக்க முயன்றும் திறக்க முடியவில்லை. நீண்டநேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் கதவு திறக்கவில்லை. இதையடுத்து போலீசார், தீயணைப்பு துறையினரை வரவழைத்து ஜேசிபி இயந்திரம் மூலம் கதவை உடைத்து உள்ளே சென்று 6 பேரையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

பேய் விரட்டுவதற்காக பூஜை நடத்தினார்களா அல்லது நரபலி கொடுப்பதற்காக முயற்சி ஏதேனும் நடந்துள்ளதா என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பூபாலனுக்கு கவுன்சலிங் ெகாடுக்கவும், பணியில் அவரிடம் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை திரும்ப ெபறவும் ஆரணி போலீசார், சென்னை ஆயுதபடை போலீசாருக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: