நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருட்டுப்போன ரூ.8லட்சம் மதிப்பிலான செல்போன்களை மீட்டு திரும்ப ஒப்படைப்பு

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருட்டுப்போன ரூ.8 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான செல்போன்களை மீட்டு உரிய நபர்களிடம் எஸ்பி ஜவஹர் ஒப்படைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் செல்போன் திருடிய நபர்களிடம் இருந்து பறிமுதல் செய்த செல்போன்களை உரிய நபர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி எஸ்பி அலுவலகத்தில் நேற்று நடந்தது. அப்போது எஸ்பி ஜவஹர் கூறியதாவது: நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொலைந்து போன, பறித்து செல்லப்பட்ட செல்போன்கள் குறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் செய்தவுடன் அந்த புகார் பதிவு செய்யப்பட்டு சைபர் க்ரைம் பிரிவு போலீசார் செல்போன்களை தேடி வந்தனர்.

தொலைந்துபோன அல்லது பறித்துச் சென்ற செல்போனை மற்றொரு நபர் பயன்படுத்தும்போது அதில் உள்ள இஎம்ஐ எண் மூலம் தகவல் சைபர் க்ரைம் பிரிவு போலீசாருக்கு கிடைக்கும். இதன் அடிப்படையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 75 செல்போன்கள் ரூ.8 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் நாகப்பட்டினம் நாடார் தெருவைச் சேர்ந்த சிவாஸ் என்பவரிடம் ஆன்லைன் வாயிலாக தொழில் செய்வதாக ஆசைவார்த்தை கூறி ரூ. 7லட்சத்து 65 ஆயிரத்து 965 ஏமாற்றியதாக சைபர் க்ரைம் பிரிவில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் ரூ.25 ஆயிரம் புகார் கொடுத்தவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எதிரிகளின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் சைபர் க்ரைம் பிரிவு ஆரம்பிக்கப்பட்டு ஒரு ஆண்டு காலத்தில் ரூ.1 கோடியே 22 லட்சத்து 93 ஆயிரத்து 182 ஏமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக புகார் வந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்களிடம் ரூ.14 லட்சத்து 36 ஆயிரத்து 445 திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. ரூ.32 லட்சத்து 29 ஆயிரத்து 959 எதிரிகளின் வங்கி கணக்கினை முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட கண்காணிப்பாளர் ஜவஹர் தெரிவித்துள்ளார்.

Related Stories: