கஞ்சிக்கோடு - வளையாறு இடையே ரயில் மோதி பெண் யானை உயிரிழப்பு: கேரளா வனத்துறை நேரில் ஆய்வு செய்து விசாரணை

பாலக்காடு: கஞ்சிக்கோடு - வளையாறு இடையே ரயில் மோதி பெண் யானை உயிரிழந்துள்ளது. கன்னியாகுமரில் இருந்து அசாம் செல்லும் விரைவு ரயில் மோதியதில் காட்டுயானை உயிரிழந்துள்ளது. இது தொடர்பாக கேரளா வனத்துறை நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாலக்காடு, வாளையார், மதுக்கரை ஆகிய பகுதிகளில் உள்ள ரயில் தடங்களில் யானைகள் உயிரிழப்பு சம்பவம் அடிக்கடி நிகழ்கிறது. இந்த நிலையில் கேரளா மாநிலம் கஞ்சிக்கோடு - வளையாறு இடையே இன்று அதிகாலை 3 மணியளவில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண்யானை மீது கன்னியாகுமரியில் இருந்து அசாம் நோக்கி செல்லும் விரைவு ரயில் மோதியது. இந்த விபத்தில் பெண்யானை உயிரிழந்தது. கேரள வனத்துறையினர் யானையின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கனவே வாளையார், மதுக்கரை இடையே அடிக்கடி யானைகள் மீது ரயில்கள் மோதும் விபத்து நிகழ்ந்து வருகிறது. இந்த சூழலில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தாமாக முன்வந்து விசாரணை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக வளையாறு பகுதியில் சூரிய ஒளி மின்சக்தி மூலம் ஒலியெழுப்ப கூடிய கருவிகளை பொருத்தினர்.

தொடர்ந்து வளையாறு எல்லை பகுதிகளில் அடிக்கடி யானைகள் உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்ந்து வரும் சூழலில் தமிழக எல்லையில் தற்போது கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கேரளா எல்லையில் யானை உயிரிழப்பானது தற்போது நிகழ்ந்துள்ளது. இதனை தொடர்ந்து கேரள வனத்துறைனர் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வனப்பகுதிகளில் ரயில்களை வேகமாக இயங்குவதே யானைகள் உயிரிழப்புக்கு காரணமாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக ரயில்வே கோட்ட அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.

Related Stories: