கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூர் ரயில்வே கேட்டில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண மேம்பாலம் கட்டப்படுமா?.. மக்கள் எதிர்பார்ப்பு

கிருஷ்ணராயபுரம்: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூர் ரயில்வே கேட்டினால் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வகையில் அப்பகுதியில் மேம்பாலம் கட்டப்பட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தின் நான்கு திசைக்கும் நடு மையமான ஊர் மையனூர் ஆகும். இதுதான் காலப்போக்கில் மாயனூர் என ஆனது.கரூர் மாவட்டத்தில் மாயனூர் சுற்றுலாத்தலமாக விளங்குகிறது.

மாயனூர் காவிரியில் 1.05 டிஎம்சி தண்ணீரை தேக்கும் அளவிற்கு கதவணை கட்டப்பட்டுள்ளது. இந்த கதவணையில் இருவழிச் சாலை வசதியுடன் கட்டப்பட்டுள்ளதால் கரூரிலிருந்து கோவை நாமக்கல் மாவட்டங்களை இணைக்கும் வகையில் உள்ளது.மேலும் மாயனூர் பிரசித்தி பெற்ற செல்லாண்டி அம்மன் கோயில், அம்மா பூங்கா ஆகியன அமைந்துள்ளது. வளர்ந்து வரும் சுற்றுலா தளமாக விளங்குகிறது. நாள்தோறும் பல்வேறு பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

மேலும் நாமக்கல் சேலம் செல்பவர்கள் மாயனூர் கதவணை வழியாக செல்வதால் காலமும், தொலைதூரமும் குறைவதால் அதிகப்படியான மக்கள் சென்று வருகின்றனர். மாயனூர் கதவணை செல்வதற்கு ரயில்வே கட்டை கடந்து தான் செல்ல வேண்டும்.மாயனூர் ரயில்வே கேட் காலை முதல் இரவு வரை பயணிகள் பயணிக்கும் நிலையில் சரக்கு ரயில் வருகைக்காக நாள் ஒன்றுக்கு 20 முதல் 25 முறை ரயில்வே கேட் திறந்து மூடப்படுகிறது.

வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ரயில்வே கேட்டில் சிக்கி காத்திருந்து செல்ல வேண்டி இருக்கிறது. இப்படி ஒவ்வொரு முறையும் ரயில்வே கேட் மூடப்படும் பொழுது இரண்டு பக்கமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்று போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகிறது. காலை நேரங்களில் பள்ளி மற்றும் கல்லூரி செல்லக்கூடிய வாகனங்கள் கேட்டில் மாட்டிக்கொண்டால் மாணவ, மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு காலதாமதம் ஆக செல்ல வேண்டி உள்ளது.

மற்றொருபுறம் ரயில்வே கேட்டால் கரூர் திருச்சி தேசிய நெடுஞ் சாலையிலும் போக்குவரத்து ஏற்படுகிறது. வளர்ந்து வரும் சுற்றுலாத் தலமான மாயனூரில் பொதுமக்கள் வெளியூர் பயணிகள் சென்று வர ஏதுவாக அப்பகுதியில் மேம்பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: