மணலி மண்டலத்தில் நடந்து வரும் மழைநீர் கால்வாய் பணியை சிறப்பு அதிகாரி நேரில் ஆய்வு: விரைந்து முடிக்க உத்தரவு

சென்னை: சென்னை மணலி மண்டலத்தில் மழைநீர் கால்வாய் பணிகளை வெள்ள தடுப்பு கண்காணிப்பு  சிறப்பு அதிகாரி கணேசன் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு  செய்தார். பருவ மழை தொடங்க இருப்பதை முன்னிட்டு, மழை வெள்ளம் பொதுமக்களை பாதிக்காத வகையில் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மணலி மண்டலத்துக்குட்பட்ட 8 வார்டுகளில் உலக வங்கி நிதியுடன் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டத்தின் கீழ் ரூ. 959 கோடி செலவில் 128.18 கி.மீ. தூரத்திற்கு மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த பணிகளை வெள்ள தடுப்பு கண்காணிப்பு சிறப்பு அதிகாரி கணேசன் ஐஏஎஸ், மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம், கவுன்சிலர் தீர்த்தி, உதவி ஆணையர் கோவிந்தராஜ், செயற்பொறியாளர் காமராஜ், உதவி செயற்பொறியாளர் தேவேந்திரன் ஆகியோருடன் சென்று  ஆய்வு செய்தார். அப்போது, சின்னசேக்காடு, சின்ன மாத்தூர், பாரதியார் தெரு ஆகிய பகுதிகளில் நடந்து வரும் கால்வாய் பணிகளை ஆய்வு செய்த சிறப்பு அதிகாரி கணேசன், பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது, அவர் கூறியதாவது:

பருவ மழையின்போது தங்குதடையில்லாமல் மழைநீர் செல்ல கால்வாய் அமைக்கும் பணி 15 பேக்கேஜ்களாக தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது, 50 சதவீதம் அளவிற்கு பணிகள் முடிந்துள்ளது. பணி முடிந்த இடங்களில் மழைநீர் கால்வாய்களை இடைவெளி இல்லாமல் இணைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாழ்வாக உள்ள இடங்களில் மழைநீர் சூழ்ந்தால் அவற்றை உடனுக்குடன் அப்புறப்படுத்த 50 ராட்சத மோட்டார்கள் தயார் நிலையில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆமுல்லைவாயல், கொசப்பூர் பகுதிகளில் உபரிநீர் கால்வாய்களை தூர்வாரி சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

பழைய மழைநீர் கால்வாயில் உள்ள அடைப்புகளை சரி செய்து கழிவுகளை அப்புறப்படுத்தவும், மழைநீர் போகக்கூடிய நீர் வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக, மிதவை இயந்திரம் உள்பட 4 பொக்லைன் இயந்திரங்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பருவ மழையை எதிர்கொள்ளவும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கவும் தேவையான அனைத்து  முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: