ஆலந்தூர் மண்டல கலந்தாய்வு கூட்டம் குடிநீர், மழைநீர் கால்வாய் பணி பற்றி அதிகாரிகள் மீது கவுன்சிலர்கள் புகார்: நடவடிக்கை எடுக்க தா.மோ.அன்பரசன் அறிவுரை

ஆலந்தூர்: பருவகால மழை குறித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் ஆலந்தூரில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற கவுன்சிலர்கள், குடிநீர், மழைநீர் கால்வாய் மற்றும் பாதாள சாக்கடை பணிகள் தொடர்பாக அதிகாரிகள் மீது சரமாரியாக குற்றம் சாட்டினர். இதுதொடர்பாக, உரிய நடவடிக்கை எடுக்க அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவுறுத்தினார். பருவகால மழை பாதிப்புகளை தவிர்ப்பது குறித்த அனைத்து துறை அதிகாரிகள், மாநகராட்சி கவுன்சிலர்கள் கலந்தாய்வு கூட்டம், ஆலந்தூர் 12வது மண்டல மாநகாட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்திற்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை வகித்தார். ஆலந்தூர் மண்டல குழு தலைவர் என்.சந்திரன், மண்டல உதவி ஆணையர் சீனிவாசன், பொறியாளர் முருகவேல் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசும்போது, மணப்பாக்கம், முகலிவாக்கம், ஆதம்பாக்கம், நங்கநல்லூர், பழவந்தாங்கல் ஆகிய பகுதிகளில் தோண்டப்பட்ட மழைநீர் கால்வாய்கள், பாதாள சாக்கடை பணிகள் போன்றவற்றை விரைவில் முடிக்கும்படியும், சேறும் சகதியுமான பகுதிகளில் மணல் மற்றும் ஜல்லி கொட்டி சாலையை சீர் செய்வது, குறைந்த மின்னழுத்தம் உள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும் என அதிகாரிகளிடம் தெரிவித்தார். மேலும் 10 நாட்களுக்கு பின்னர் நடக்கும் இதுபோன்ற கூட்டத்தில் பணிகள் விவரங்களை தெரிவிக்குமாறும் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். இந்த கூட்டத்தில் மாநகராட்சி கவுன்சிலர்கள் செல்வேந்திரன், பிருந்தா ஸ்ரீமுரளி கிருஷ்ணன், துர்கா தேவி நடராஜன், பூங்கொடி ஜெகதீஸ்வரன், ரேணுகா சீனிவாசன், தேவி ஏசுதாஸ், பாரதி குமரன், உஷாராணி பாண்டியன் ஆகியோர் மாநகராட்சி மெட்ரோ குடிநீர் வாரிய அதிகாரிகள் மீது சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

இதில், குடிநீர் பிரச்னை, மழைநீர் கால்வாய், பாதாள சாக்கடை பணிகளை முடிக்காதது, சேறும் சகதியுமான சாலைகளை சீர்செய்யாதது, சாய்ந்த மின் கம்பங்களை மாற்றி அமைக்காதது என பல குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். அடுத்த முறை நடக்கும் கூட்டத்தில் இதுபோன்ற புகார்கள் வராதபடி பார்த்துக் கொள்ள வேண்டும் என அதிகாரிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கேட்டுக்கொண்டார்.

Related Stories: