நாகர்கோவிலில் போலீசார் பைக் அணிவகுப்பு-பொதுமக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்

நாகர்கோவில் : நாகர்கோவிலில் நேற்று திடீரென போலீசார் முக்கிய பகுதிகளில் பைக் அணிவகுப்பு  நடத்தினர். திருட்டு கும்பல், மோசடி கும்பல்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும் வகையில் இந்த ஊர்வலம் நடைபெற்றது.தீபாவளி பண்டிகை வருகிற 24ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இன்னும் 12 நாட்களே இருப்பதால் தீபாவளிக்கான பொருட்கள், புதிய ஆடைகள் வாங்க கடை வீதிகளில் மக்கள் பெருமளவில் திரள்வார்கள். இதற்காக வங்கிகளில் இருந்தும் பணம் எடுத்து வருவார்கள்.

இதனால் கடைவீதிகள், ஜவுளி கடைகள், நகை கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு உள்ளிட்ட சம்பவங்களை தடுக்கும் வகையில் குமரி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பை அதிகரிக்க எஸ்.பி. ஹரிகிரன் பிரசாத் உத்தரவிட்டுள்ளார். முக்கிய கடை வீதிகள், வங்கிகள் நிறைந்த பகுதிகளில் போலீசார் மாறுவேடங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது. பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ள பஸ்களில், பெண்களிடம் திருட்டு நடைபெறுவதை தடுக்கவும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

இதன் ஒரு கட்டமாக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நகரில் முக்கிய பகுதிகளில் போலீசார் வாகன அணிவகுப்பு நடத்த எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். அதன்படி நேற்று காலை நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் இருந்து, பார்வதிபுரம் மேம்பாலம் வரை போலீசார் ஹெல்மெட் அணிந்து பைக் பேரணி நடத்தினர்.

கண்காணிப்பு கேமரா பொருத்திய வாகனம் முன் செல்ல, போலீசார் பைக்கில் பின் தொடர்ந்து சென்றனர். பணம் மற்றும் நகைகளை பொதுமக்கள் விழிப்புடன் பார்த்துக் ெகாள்ள வேண்டும். வங்கிகளில் இருந்து பணம் எடுத்து வருபவர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நகை கடைகள், ஜவுளி கடைகளில் கண்டிப்பாக கண்காணிப்பு கேமராக்கள் இயங்க வேண்டும். பஸ்களில் கூட்ட நெரிசலில் பெண்கள் முண்டியடித்து ஏறுவதை தவிர்க்க வேண்டும். பைக்கில் செல்லும் போது ஹெல்மெட் அணிய வேண்டும்  என்றும் போலீசார் கூறினர்.

Related Stories: