சென்னையில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணி: திருமாவளவன், வைகோ, முத்தரசன், கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

சென்னை: சென்னை அண்ணாசாலையில் நடைபெற்ற சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணியில் தலைவர்கள் கைகோர்த்து நின்று சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். தமிழகம் முழுவதும் 500 இடங்களில் இந்த பேரணி நடைபெற்றது. தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்.சை கண்டித்து சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணி அக்டோபர் 11ம் தேதி நடைபெறும் மனித சங்கிலியில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்க வேண்டும் என கட்சிகளின் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். அதன் அடிப்படையில் 17 கட்சிகள் 44 இயக்கங்கள் ஆதரவு தெரிவித்தன. அதன் அடிப்படையில், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நேற்று மாலை இந்த மனித சங்கிலி நடைபெற்றது.

சென்னையில் அண்ணாசாலையில் உள்ள பெரியார் சிலை அருகே இருந்து மாலை 4 மணிக்கு மனித சங்கிலி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.   மாலை 4.15 மணிக்கு திக தலைவர் கி.வீரமணி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், தமிழ்நாடு இளைஞர்கள்  சங்கம் தலைவர் எம்.எம்.ஆர்.மதன் உள்ளிட்ட ஏராளமானோர் அண்ணாசாலைக்கு வந்தனர். அவர்கள் அனைவரும் கைகோர்த்தபடி சாலை ஓரத்தில் வரிசையாக நின்றனர். இதைத்தொடர்ந்து தொல்.திருமாவளவன், ‘சமூக நல்லிணக்கத்தை பாதுகாப்போம், ஜனநாயகத்தை வென்றெடுப்போம், வெறுப்பு அரசியலை விரட்டி அடிப்போம்’ என கோஷமிட்டார்.

மனித சங்கிலியில் பங்கேற்ற தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அதனை திரும்ப கூறியபடி கோஷமிட்டனர். சுமார் ஒரு மணி நேரம் அவர்கள் சாலை ஓரத்தில் நின்றபடி சமூகநல்லிணக்கத்தை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதையடுத்து, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட மனித சங்கிலியில் பங்கேற்ற கட்சி தலைவர்கள் திறந்த ஜீப்பில் நின்றபடி அண்ணா சாலையில் மனித சங்கிலியில் பங்கேற்றவர்களை பார்த்து கோஷமிட்டபடி சென்றனர்.  அண்ணா சாலை எல்.ஐ.சி. கட்டிடம் அருகே தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் தங்கபாலு, துணைத்தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், நாஞ்சில் பிரசாத், முத்தழகன், டில்லி பாபு, ரஞ்சன் குமார் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் காங்கிரஸ் கொடியுடன் மனித சங்கிலியில் பங்கேற்றனர்.

மனித சங்கிலியில் மாற்றுத்திறனாளிகள் ஏராளமானோர் சக்கர நாற்காலி, 3 சக்கர மோட்டார் சைக்கிளுடன் பங்கேற்றனர். அவர்கள் ஒரே இடத்தில் திரண்டு நின்று சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி கோஷமிட்டனர். சென்னையின் முக்கிய சாலையான அண்ணாசாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இந்த மனித சங்கிலி நடைபெற்றது. சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை மனித சங்கிலியில் பங்கேற்றவர்கள் சாலையோரம் கொடிகளை பிடித்தபடி நின்றனர். இதனால் நேற்று மாலை அண்ணாசாலை மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. இதே போன்று, 500 இடங்களில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணி நடைபெற்றது.

Related Stories: