கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் சசிகலா உட்பட 316 பேரிடம் நடத்திய விசாரணை அறிக்கை ஊட்டி கோர்ட்டில் தாக்கல்

ஊட்டி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து, சசிகலா உட்பட 316 சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் கூடுதல் எஸ்பி கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்தார். கொடநாடு பகுதியில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு, நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதற்கிடையே இவ்வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என குற்றவாளி சயான் மனுவை தொடர்ந்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் ஐஜி சுதாகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. அதன்படி சசிகலா, முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி உட்பட 316க்கும் மேற்பட்டவர்களிடம் இதுவரை விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

மேலும் ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையும் தொடர்ந்து நடந்து வருகிறது. தனிப்படையை சேர்ந்த கூடுதல் எஸ்பி கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் நீதிமன்றத்தில் ஆஜராகி வழக்கு விசாரணை குறித்து நீதிபதியிடம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இவ்வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.  இதனால், இதுவரை சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணை தொடர்பான ஆவணங்களை மூடி முத்திரையிடப்பட்ட கவரில் கூடுதல் எஸ்பி கிருஷ்ணமூர்த்தி நேற்று மாவட்ட நீதிபதி முருகனிடம் ஒப்படைத்தார். இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசார் பெற்றுக் கொண்டு தொடர்ந்து விசாரணையை துவங்க உள்ளனர்.

Related Stories: