கொடநாடு எஸ்டேட் வழக்கு; சசிகலாவிடம் நடத்தப்பட்ட விசாரணை விவரம் ஊட்டி கோர்ட்டில் தாக்கல்

ஊட்டி: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமாக நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகேயுள்ள கொடநாடு எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட்டில் 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் தேதி கொள்ளையடிப்பதற்காக 11 பேர் கொண்ட கும்பல் நுழைந்தது. அப்போது எஸ்டேட்டில் காவலில் இருந்த காவலாளி ஓம்பகதூரை அந்த கும்பல் கொலை செய்தது. பின்னர் பங்களாவுக்குள் சென்று பல்வேறு பொருட்களையும், ஆவணங்களையும் கொள்ளையடித்து சென்றது.

இதுதொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேரை கோத்தகிரி சோலூர்மட்டம் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு ஊட்டியில் உள்ள நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஐ.ஜி. சுதாகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கடந்த ஓராண்டு காலமாக போலீசார் மீண்டும் விசாரித்து வந்தனர். சசிகலா உள்பட 326 சாட்சிகளிடம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், வழக்கு தொடர்பாக பல்வேறு தடயங்களையும் ஆவணங்களையும் சேகரித்து இருந்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கு கடந்த வாரம் சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. இதனால் இவ்வழக்கு இனிவரும் காலங்களில் சிபிசிஐடி போலீசார் விசாரிக்க உள்ளனர். இதனைதொடர்ந்து கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக கோத்தகிரி சோலூர்மட்டம் போலீசார் மேற்கொண்ட விசாரணை மற்றும் சேகரிக்கப்பட்ட தடயங்கள் குறித்த முழு ஆவணங்களையும் மூடி முத்திரையிடப்பட்ட உறையில் இன்று தனிப்படை கூடுதல் எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட நீதிபதி முருகனிடம் வழங்கினார்.

Related Stories: