கம்பம், வருசநாடு பகுதிகளில் காணும் இடமெல்லாம் தெருநாய்கள்-கடந்த 2 நாட்களில் நாய்க்கடிக்கு 23 பேர் காயம்

கம்பம் : கம்பம் பகுதி முழுவதும் கட்டுபாடின்றி சுற்றித்திரியும் தெருநாய்களால் ரேபிஸ் அபாயம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் அவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கம்பத்தில் காணும் இடமெல்லாம் அதிக எண்ணிக்கையில் தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. தெரு நாய்களால் உருவாகும் ரேபிஸ் எனும் மிகக்கொடிய வைரஸ் தொற்றால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் அதன் விளைவுகள் மிக கடுமையானதாக இருக்கும்.

இந்நோயால் பாதிக்கப்பட்ட நாய் கடிப்பதால் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு ரேபிஸ் வைரஸ் தொற்று ஏற்படும். மிக ஆபத்தான ரேபிஸ் பரவலுக்கு அடிப்படை காரணமாக இருப்பது தெரு நாய்கள். இவற்றை கட்டுப்படுத்த எத்தனை நடவடிக்கைகள் எடுத்தாலும் பலன் அளிக்காலேயே உள்ளன. இதன்படி கம்பம் நகரில் உள்ள 33 வார்டுகளில் 500 க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகனத்தில் செல்வோர், நடந்து செல்வோர் மட்டுமின்றி வீடுகளில் வளர்க்கும் கால் நடைகளையும் தெருநாய்கள் ஒன்றுசேர்ந்து விரட்டுகின்றன.

குறிப்பாக கம்பமெட்டு காலனி பகுதி, நாட்டுக்கல், தாத்தப்பன் குளம் பகுதிகளில் அதிகளவில் தெரு நாய்கள் வலம் வருகின்றன. இவை பெண்கள், சிறுவர்கள் மற்றும் முதியவர்களை கண்டால் விரட்டி செல்கிறது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் நடமாட வேண்டிய நிலை உருவாகி உள்ளது. இந்நிலையில் நேற்று வெள்ளை நிறம் கொண்ட நாய் ஒன்று கம்பம் மாரியம்மன் கோவில் தெரு, கொண்டித்தொழு தெரு, கிராமச் சாவடிதெரு, தியாகி வெங்காடச் சலம் தெரு, பார்க் ரோடு பகுதியில் நடந்து சென்றவர்களை கடித்தது.

இதில் காயமடைந்த கம்பத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார்(33), பழனிக்குமார்(37), அய்யணன்(21), பூங்குலழி(42), கிரிஷ்காந்த்(32), குள்ளப்பகவுண்டன்பட்டியைச் சேர்ந்த கணேசன்(40), முத்துலாபுரத்தைச் சேர்ந்த ஈஸ்வரன்(34), சாமாண்டிபுரத்தைச் சேர்ந்த அனிதா உள்ளிட்ட 8 பேர்கள் அடுத்தடுத்து கம்பம் அரசு மருத்துவ மனையில் நாய் கடிக்கு ஊசி போட வந்தனர். இது கறித்து பொது மக்கள் கம்பம் நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியனிடம் தகவல் தெரிவித்தனர். அவரது உத்தரவின்பேரில் நகராட்சி சுகாதார அலுவலர் அரசக்குமார், பொது மக்களை கடித்த நாயை பிடிக்க துப்புரவு பணியாளர்களை பாதுகாப்புடன் அனுப்பி வைத்தார்.

 துப்புரவு பணியாளர்கள் வலை முலம் அந்த நாயை பிடித்து கால்நடை மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஒரே நாளில் அடுத்தடுத்து பொதுமக்களை நாய் கடித்த சம்பவம் கம்பத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.*கடமலை மயிலை ஒன்றியத்தில் கண்டமனூர் கடமலைக்குண்டு மயிலாடும்பாறை தங்கம்மாள்புரம் வருசநாடு சிங்கராஜபுரம்  தும்மக்குண்டு வாலிப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றி திரிகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு பல கிராமங்களில் பல முதியோர்களை தெருநாய்கள் கடித்து உள்ளது.

இவர்கள் கடமலைக்குண்டு மயிலாடும்பாறை வருசநாடு உள்ளிட்ட தனியார் மருத்துவமனைகளில் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 மேலும் சில இடங்களில் கால்நடைகளான ஆடு, மாடுகளையும் தெருநாய் கடித்து உள்ளது. எனவே சிறுவர்கள் பள்ளி மாணவ மாணவிகள் தெருவில் நடக்கவும் விளையாடவும் அச்சமடைந்துள்ளனர். இதுபற்றி கடமலை மயிலை ஒன்றியத்தில் ஒவ்வொரு ஊராட்சி நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கண்டமனூர் சமூக அலுவலர் அங்குசாமி கூறுகையில், ‘‘நேற்று முன்தினம் கண்டனூர் பகுதியில் 15 க்கும் மேற்பட்ட நபர்களை தெருநாய்கள் கடித்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Related Stories: