உளுந்தூர்பேட்டையில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்த 7 பேர் கைது

* 1.5 கிலோ கஞ்சா, 3 இருசக்கர வாகனம், 7 செல்போன்கள் பறிமுதல்

உளுந்தூர்பேட்டை : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் உத்தரவின் பேரில் உளுந்தூர்பேட்டை பகுதியில் டிஎஸ்பிக்கள் மகேஷ் மற்றும் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் சேலம் ரோட்டில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சுடுகாடு அருகில் சந்தேகத்துக்கிடமாக 3 இருசக்கர வாகனங்களில் வந்த 7 பேரை மடக்கி சோதனை செய்ததில், அவர்களிடம் 1.5 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியை சேர்ந்த கொளஞ்சி மகன்கள் கார்த்திக் (31), ஏழுமலை (20), கம்மாபுரம் அருகே பெரியவரப்பூர் செல்லமுத்து மகன் ராஜேஷ்குமார் (45), உளுந்தூர்பேட்டை அருகே வெள்ளையூர் கிராமம் அபியுல்லா மகன் தாஹா (38), உளுந்தூர்பேட்டை அன்னை சத்யா தெரு வாசுதேவன் மகன் அருண்குமார் (22), வெங்கடேசபுரம் ராஜேந்திரன் மகன் நாகராஜ் (33), சிவகுருநாதன் தெரு பன்னீர்செல்வம் மகன் சூர்யா (22) உள்ளிட்ட 7 பேரை கைது செய்து அவர்களுடைய 3 இருசக்கர வாகனங்கள் மற்றும் 7 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.

இதன் மதிப்பு ரூபாய் 4 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. உளுந்தூர்பேட்டை பகுதியில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்பவர்கள் தொடர்ந்து கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டு வருவதாகவும், வெளி மாவட்டங்களில் இருந்து கஞ்சா கொண்டு வருபவர்கள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: