வள்ளலார் முப்பெரும் விழாவை முன்னிட்டு மயிலாப்பூர் மாதவ பெருமாள் கோயிலில் அன்னதானம்: பக்தர்கள் திரளாக பங்கேற்பு

சென்னை: வள்ளலார் முப்பெரும் விழாவை முன்னிட்டு மயிலாப்பூர் மாதவப் பெருமாள் கோயில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். வள்ளலார் முப்பெரும் விழா இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி வள்ளலார்-200 லோகோ, தபால் உரை மற்றும் சிறப்பு மலரை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் முக்கிய கோயில்களில் ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.

அதன்படி, முதல் ஒரு மாதம் அன்னதானம் வழங்கப்படும் சென்னையில் உள்ள கோயிலின் பட்டியலையும் வெளியிட்டார். தொடர்ந்து கந்தகோட்டம் முருகன் கோயில், பட்டினத்தார் கோயில், சீனிவாச பெருமாள் கோயிலில் அன்னதான திட்டத்தை தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து, மயிலாப்பூர் மாதவ பெருமாள் கோயிலில் அன்னதானம் வழங்கும் திட்டத்தை இணை ஆணையர் ரேணுகா தேவி நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் இணை ஆணையர் காவிரி, துணை ஆணையர் ஹரிகரன், உதவி ஆணையர் பாஸ்கரன், செயல் அலுவலர் திவ்யா மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். இக்கோயிலில் இன்றும், நாளையும் அன்னதானம் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: