தமிழகம் முழுவதும் 2 நாள் நடந்த ஆபரேசன் மின்னல் வேட்டை 1,310 ரவுடிகள் கைது: தமிழ்நாடு காவல் துறை அதிரடி

சென்னை: தமிழகம் முழுவதும் 2 நாள் நடந்த ஆபரேசன் மின்னல் வேட்டை மூலம் 1,310 ரவுடிகளை தமிழ்நாடு காவல் துறை கைது செய்துள்ளது. இதுகுறித்து டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டில் ரவுடிகளுக்கு எதிரான மின்னல் வேட்டையில் 24 மணி நேரத்தில் 133 ரவுடிகள் சுற்றி வளைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் பல ஆண்டுகள் பிடிப்படாமல் இருந்த, பிரபல ரவுடிகளும் அடங்குவர். இதில் சில ரவுடிகள் வெளி மாநிலங்களில் கைது செய்யப்பட்டனர். அடுத்த 24 மணி நேரத்தில் நடந்த வேட்டையில் மேலும் பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கடந்த 48 மணி நேரத்தில் நடந்த மின்னல் வேட்டையில் 1,310 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 221 ரவுடிகள் தலைமறைவு குற்றவாளிகள், 110 ரவுடிகள் மீது பிடி ஆணைகள் நிலுவையில் இருந்தன. இவர்கள் 331 பேரும் பல்வேறு சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டனர். பிடிபட்ட மீதமுள்ள 979 ரவுடிகள், காவல் நிலைய பதிவேடு குற்றவாளிகள், இவர்கள் மீது நன்னடத்தை உறுதி மொழி பெறப்பட்டது. அதை மீறும் பட்சத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டு 6 மாதம் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

Related Stories: