மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2026க்குள் பயன்பாட்டிற்கு வரும்: ஒன்றிய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பேட்டி

தர்மபுரி: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2026ம் ஆண்டுக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தர்மபுரியில் ஒன்றிய சுகாதாரத்துறை இணை அமைச்சர் தெரிவித்தார். தர்மபுரி வடக்கு ஒன்றிய பாஜ மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம், அளேதர்மபுரி சமுதாயகூடத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு வந்த ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதிபிரவின் பவார், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

தமிழ்நாடு, கேரளா கலாச்சாரம், மொழி, மதம், வரலாற்றில் சிறந்து விளங்குகின்றன. ஒன்றிய அரசு பல்வேறு மருத்துவ திட்டங்கள் அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் மக்களை சென்றடைய விளம்பரப்படுத்துவதற்காக, தமிழகத்திற்கு ரூ.24 கோடி வழங்கப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2026ம் ஆண்டுக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும். கொரோனா காலக்கட்டத்தினால் கட்டிடம் கட்டுவதில் தாமதம் ஏற்பட்டது.

தற்போது மறுமதிப்பீடு தயாரித்து ரூ.1977 கோடியாக மாற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கு தற்போது ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு, வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பாட்டிற்கு வந்ததாகத்தான் அர்த்தம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: