அங்கன்வாடியில் அமைக்கப்பட்டுள்ள 2,381 மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்: தொடர அனுமதித்து அரசாணை வெளியீடு

சென்னை: தமிழக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷாவெளியிட்டுள்ள அரசாணை: 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, மற்றும் யுகேஜி வகுப்புகள் 2022-2023ம் கல்வி ஆண்டிலும் தொடர்ந்து செயல்பட அனுமதியும், பாடம் கற்பிக்க  சிறப்பு ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கும் அனுமதி வழங்குமாறும், அதற்கான செலவின நிதியை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்விக்கு வழங்கவும் தொடக்க கல்வி இயக்குநர் அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளார். தொடக்க கல்வி இயக்குநரின் கருத்துரு விரிவாக ஆய்வு செய்யப்பட்டு, 2022-2023ம் கல்வி ஆண்டில் மேற்கண்ட வகுப்புகள் அதே இடத்தில் தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது. அந்த வகுப்புகளில் பாடம் நடத்த பள்ளி மேலாண்மைக் குழுவின் மூலம் ஆசிரியர்களை தேர்வு செய்து நியமனம் செய்யலாம் என்றும்,அந்த சிறப்பு ஆசிரியர்களுக்கு பிழைப்பூதியமாக ரூ.5 ஆயிரம் பள்ளி கல்வி மேலாண்மைக் குழுவின் மூலம் வழங்கலாம் என்றும், இந்த ஆசிரியர்களுக்கு பணிக்காலம் ஜூன் மாதம் முதல் ஏப்ரல் மாதம் முடிய 11 மாதங்கள் மட்டுமே என்றும் அனுமதி அளித்து ஆணையிடப்படுகிறது.

Related Stories: