9,000 ஹெக்டர் இலக்கு நிர்ணயம் வலங்கைமான் தாலுகாவில் சம்பா சாகுபடி பணிகள் தீவிரம்

*நீண்டகால நெல் ரகத்தை விவசாயிகள் தேர்வு

வலங்கைமான் : வலங்கைமான் தாலுக்காவில் சம்பா சாகுபடி சுமார் 9000 ஹெக்டர் இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ள நிலையில் சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக தென்மேற்கு பருவமழை குறைவு காரணமாக மேட்டூர் அணை காலதாமதமாக திறக்கப்பட்டு முன்கூட்டியே மூடப்பட்டது. அக் காலகட்டங்களில் வடகிழக்கு பருவமழையை நம்பி சம்பா சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் காரணமாக உரிய நேரத்தில் சம்பா சாகுபடி பணிகளை துவங்க இயலாமல் வடகிழக்கு பருவமழை தொடங்கிய பின்னரே சாகுபடி பணிகள் துவங்கியது.

மேலும் அப்போது மூன்று போக சாகுபடி முடிவுக்கு கொண்டு வரப்பட்டு ஒரு போக சம்பா சாகுபடியை மிகுந்த போராட்டத்துக்கு இடையே விவசாயிகள் மேற்கொண்டனர். இந்நிலையில் இந்த ஆண்டுதென்மேற்கு பருவமழை முன்னதாகவே காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. அதனை அடுத்து டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி மேற்கொள்ளும் வகையில் முன்கூட்டியே மேட்டூர் அணை பாசனத்திற்காக திறக்கப்பட்டது.

இந்நிலையில் சம்பா சாகுபடி பணிகள் துவங்குவதில் காலதாமதம் இல்லை. இருப்பினும் வடகிழக்கு பருவமழைக்கு முன்னராகவே டெல்டா மாவட்டங்களில் பெய்த தொடர் மழை காரணமாக சம்பா விதைவிடும் பணிகளில் காலதாமதம் ஏற்பட்டது. மேலும் புழுதி உழவு செய்து நேரடி விதைப்பு செய்வதும் வாய்ப்பில்லாமல் போனது. இருப்பினும் தற்போது டெல்டா மாவட்டம் முழுவதும் சம்பா சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன.

வலங்கைமான் தாலுகாவில் உள்ள 71 வருவாய் கிராமங்கள் குடமுருட்டி ஆறு, வெட்டாறு, வெண்ணாறு மற்றும் முக்கிய பாசன வடிகால் ஆறான சுள்ளன்ஆறு மூலம் பாசன வசதி பெறுகின்றது. நடப்பாண்டு 8 ஆயிரத்து 950 ஹெக்டேர் சம்பா சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று சுமார் நான்காயிரம் ஹெக்டேரில் குறுவை அறுவடைக்குப் பின் மேற்கொள்ளக்கூடிய தாளடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சம்பா சாகுபடிக்கு ஏற்ற கோ51, கோ ஆர் 50 , எம் டி யு 7029, சி ஆர் 1009 சப் 1 நெல் ரகங்கள் வலங்கைமான், ஆலங்குடி, ஆவூர் மற்றும் அரித்துவாரமங்கலம் வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைத்து வினியோகம் செய்யப்பட்டு வந்தது. மேலும் இவ்வாண்டு தமிழ்நாடு அரசு பாரம்பரிய நெல் ரகங்கள் உற்பத்தியினை அதிகரிக்கும் பொருட்டு அரசு விதை பண்ணை மூலம் உற்பத்தி செய்யப்பட்ட சம்பா சாகுபடிக்கு ஏற்ற பாரம்பரிய நெல் ரகங்களான ஆத்தூர் கிச்சடி சம்பா, கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, தூயமல்லி ஆகிய ரகங்கள் 50 சதவீத மானியத்தில் வேளாண்மை விரிவாக்கம் மையங்கள் மூலம் வினியோகம் செய்யப்பட்டது. அதேபோன்று வேளாண்மை துறையின் மூலம் உற்பத்தி செய்யப்படும் இடு பொருளான நெல் நுண்ணூட்டம் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைத்து வினியோகம் செய்யப்பட்டது.

சம்பா சாகுபடியில் நேரடி விதைப்பு மற்றும் கை நடவு இயந்திரம் நடவு ஆகிய முறைகளில் சாகுபடி பணிகள் நடைபெறுவது வழக்கம். ஆட்கள் பற்றாக்குறை மற்றும் நிர்வாகச் செலவு குறைவு உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் நேரடி விதைப்பில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். அதற்கு அடுத்தபடியாக ஆட்கள் பற்றாக்குறையை சமாளிக்கும் விதமாக இயந்திர நடவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு வழக்கத்தை விட கூடுதலாக வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னரே வலங்கைமான் உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வந்த தொடர்மழை காரணமாக அதிக அளவில் புழுதி உழவு செய்வதற்கு வாய்ப்பில்லாமல் போனது. இருப்பினும் பல கிராமங்களில் சேற்று உழவு செய்து நேரடி விதைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோன்று இயந்திர நடவு மேற்கொள்ளும் வகையில் பாய்நாற்றங்கால் மூலம் பல கிராமங்களில் விதை விடப்பட்டுள்ளது மேலும் தனியார் நிறுவனங்கள் மூலமும் இயந்திர நடவுமேற்கொள்ள முன் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை நீங்கலாக வழக்கமாக உள்ள கை நடவு முறையில் சுமார் நான்காயிரம் ஹெக்டேரில் நடவு செய்யும் விதமாக விதை விடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்பசலனம் போன்ற காரணங்களால் பெய்த கன மழையை போன்று வடகிழக்கு பருவமழையும் இந்த ஆண்டு அதிக அளவில் இருக்கும் என விவசாயிகள் கருதுகின்றனர். அதனையடுத்து மழைக்காலங்களில் அதிக தண்ணீர் தேங்கும் நிலையில் அதைத் தாங்கி வகையில் நீண்டகால நெல் ரகத்தை விவசாயிகள் தேர்வு செய்து விதை விட்டுள்ளனர்.

Related Stories: