தேயிலை தோட்ட நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்கள் பணிபுரிகிறார்களா?

*தொழிலாளர்துறையினர் திடீர் ஆய்வு

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தோட்ட நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்கள் பணிபுரிகிறார்களா என தொழிலாளர்த்துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

தொழிலாளர்த்துறை சார்பில் நீலகிரி மாவட்டத்தில் தோட்ட நிறுவனங்கள், கடைகள், உணவு நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் பிற இடங்களில் குழந்தை தொழிலாளர் எவரேனும் பணிபுரிகிறார்களா என மாதந்தோறும் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் தாலுக்காவிற்கு உட்பட்ட தேயிலை தோட்ட நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்கள் எவரேனும் பணி புரிகிறார்களா என நீலகிரி மாவட்ட குழந்தைகள் தொழிலாளர் தடுப்பு குழுவினர் தொழிலாளர் உதவி ஆணையர் சதீஸ்குமார் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து தோட்ட நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து உரிய விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சதீஸ்குமார் கூறியதாவது:குழந்தை தொழிலாளர் மற்றும் வளரிளம் பருவத்தினர் ஒழிப்பு மற்றும் ஒழுங்குமுறை சட்டம் 1986ன் படி 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பணியில் ஈடுபடுத்துவது மற்றும் 18 வயதிற்குட்பட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் அமர்த்துவது குற்றமாகும். அவ்வாறு குழந்தை தொழிலாளர் பணியமர்த்தப்பட்டால் உரிமையாளருக்கு நீதிமன்றம் மூலம் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் மற்றும் இரண்டு வருட சிறை தண்டனை இல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

 

நீலகிரி மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்கள் தொடர்பாக www.pencil.gov.in என்ற இணையதளம் அல்லது தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் 0423-2232108, சைல்டுலைன் 1098 மற்றும் உதவி ஆணையர் 6383573843, ஆய்வாளர்கள் 9444062023, 9952441688 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம், என்றார்.

Related Stories: