வன உயிரின வாரவிழாவை முன்னிட்டு புலிகள் காப்பகம் குறித்த கலந்தாய்வு மாநாடு: அமைச்சர் ராமச்சந்திரன், தயாநிதி மாறன் எம்பி தொடங்கி வைத்தனர்

சென்னை: வன உயிரின வாரவிழாவை முன்னிட்டு புலிகள் காப்பகம் குறித்த கலந்தாய்வு மாநாட்டை அமைச்சர் ராமச்சந்திரன், தயாநிதி மாறன் எம்பி தொடங்கி வைத்தனர். எழும்பூரில் வனத்துறை சார்பில் வன உயிரின வாரவிழாவின் முதல் நாளான நேற்று தமிழ்நாடு புலிகள் காப்பகம் குறித்த கலந்தாய்வு மாநாடு நடந்தது. விழாவுக்கு சுற்றுச்சூழல், காலநிலை  மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச்  செயலாளர் சுப்ரியா சாஹு முன்னிலை வகித்தார். இதில், தமிழ்நாடு புலிகள் மாநாட்டை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி  துவக்கி வைத்தனர். விழாவில் சென்னை மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று வெற்றி  பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் ராமச்சந்திரன் சான்றிதழ்  மற்றும் பரிசுகளை வழங்கினார்.

விழாவில் அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது: இந்தியாவில் உள்ள மொத்த  புலிகள் எண்ணிக்கையில் 10 சதவீதம் தமிழகத்தில் தான் உள்ளன. தமிழகத்தில் உள்ள 5 புலிகள் சரணாலயம் 6,195 சதுர கீலோ மீட்டர் பரப்பளவிற்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. அந்த அளவிற்கு வன விலங்குகள் பராமரிப்பில் வனத்துறை மிகுந்த கவனம் செலுத்தி வருகிறு. தமிழகத்தில் வனப்பரப்பை 33 சதவீதம் உயர்த்திட பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தை அண்மையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். புலிகள்,யானைகள் காப்பகப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும், வனவிலங்குகளுக்கு தேவையான காலங்களில்  ஆங்காங்கு தண்ணீர் தொட்டிகள் அமைத்திடவும், காட்டுத்தீயினை கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

வனத்துறை மேற்கொள்ளும் வனப்பரப்பை அதிகப்படுத்துதல் மற்றும் வன விலங்குகளை பாதுகாக்கும் பணியில் பொதுமக்களும் பங்கேற்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வன உயிரின வார விழாவின் முதல் நாள்  தமிழ்நாடு புலிகள் காப்பக கலந்தாய்வு மாநாடாக நடத்தப்படுகிறது என்று பேசினார். விழாவில் தமிழ்நாடு புலிகள் காப்பகம் குறித்த கலந்தாய்வு நிகழ்ச்சியில் புலிகள் பாதுகாப்பு கூட்டமைப்பின் பொதுச் செயலாளர்  ராஜேஷ் கோபால் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள், வனத்துறை அதிகாரிகள் பல்வேறு தலைப்புகளில் புலிகள் காப்பகங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு  சீரமைப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தங்களின் ஆய்வுக் குறிப்புகளை விவரித்தனர். மேலும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், எழும்பூர் எம்எல்ஏ பரந்தாமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி பேசினர். விழாவில் சென்னை மண்டல வனப் பாதுகாவலர் கீதாஞ்சலி, சென்னை மாவட்ட வனப் பாதுகாவலர் பிரியதர்ஷினி மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: