மார்பக புற்றுநோய், மனநலம் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி: டிஜிபி சைலேந்திர பாபு தொடங்கி வைத்தார்

தாம்பரம்: மார்பக புற்றுநோய் மற்றும் மனநலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற சைக்ளோதான் என்னும் சைக்கிள் பேரணியை  நேற்று குரோம்பேட்டையில் ரேலா மருத்துவமனை மற்றும் சென்னை சைக்கிளிங் குழுமம் இணைந்து நடத்தியது. இந்த பேரணியை, ரேலா மருத்துவமனை தலைமை செயல் அதிகாரி டாக்டர் இளங்குமரன் கலியமூர்த்தி முன்னிலையில் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு கொடியசைத்து துவக்கி வைத்தார். அக்டோபர் மாதத்தை மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைபிடிப்பதை வலியுறுத்தியும், அக்டோபர் 10ந்தேதி உலக மனநல தினத்தையொட்டியும் இந்த பேரணி நடைபெற்றது.

இந்த பேரணி 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நன்கு பயிற்சி பெற்ற  வீரர்களுக்கு 150 கி.மீ. தூரமும், துவக்க நிலை வீரர்களுக்கு 50 கி.மீ. தூரமும் நடைபெற்றது.  இதில் சென்னையைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட ஆர்வமுள்ள சைக்கிள் ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர். ‘மார்பகப் புற்றுநோய்க்கு பெடல் அப்’ என்னும் கருத்தை வலியுறுத்தும் விதமாக குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் துவங்கிய இந்த பேரணி ஜிஎஸ்டி சாலை, வண்டலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களுக்கு சென்று மீண்டும் ரேலா மருத்துவமனைக்கு வந்து முடிவடைந்தது.

டிஜிபி சைலேந்திர பாபு பேசுகையில், ‘‘மார்பக புற்றுநோய் மற்றும் மனநலம் போன்ற பிரச்னைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ள ரேலா மருத்துவமனையை நான் மனதார பாராட்டுகிறேன்,’’ என்றார்.

Related Stories: