தேனி-குமுளி தேசிய நெடுஞ்சாலை உப்பார்பட்டி பிரிவு சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் வசூல் தொடங்கியது

தேனி: தேனியில் இருந்து குமுளி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உப்பார்பட்டி பிரிவு அருகே அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியில் நேற்று முதல் வாகன ஓட்டுனர்களிடம் இருந்து வாகனங்களுக்கான சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. திண்டுக்கல்லில் இருந்து குமுளி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்படும் என கடந்த 2010ம் ஆண்டு ஒன்றிய அரசு அறிவித்தது. இதன்படி, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலமாக நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் நடந்தன. ஆரம்பத்தில் நான்கு வழிச்சாலை என கூறப்பட்டாலும், நான்கு வழிச்சாலையாக இல்லாமல் மையத்தடுப்பானுடன் கூடிய இருவழிச்சாலையே உருவாக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே ஒரு சுங்கச்சாவடியும், தேனியை அடுத்து உப்பார்பட்டி பிரிவு அருகே ஒரு சுங்கச்சாவடியும் அமைக்கும் பணி நடந்தது.

நான்கு வழிச்சாலை இல்லாமல் இருவழிச்சாலை மட்டுமே அமைக்கப்பட்டதால் சுங்கக்கட்டணத்தை ஒன்றிய அரசு வசூலிக்க எதிர்ப்பு கிளம்பியது. இதனால் சுங்கக்கட்டணம் வசூலிக்காமல் இருந்தது. இந்நிலையில், ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திண்டுக்கல் திட்ட செயலாக்க பிரிவானது அக்டோபர் 1ம் தேதி காலை 8 மணி முதல் தேனியில் இருந்து குமுளி செல்லும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய சாலையில் உப்பார்பட்டி பிரிவு அருகே உள்ள சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் ஒப்பந்தகாரர் மூலம் வசூலிக்கப்படும் என அறிவித்தது. இந்த அறிவிப்பி்ற்கு தேனி மாவட்ட வர்த்தகர்கள், வாகன ஓட்டுனர்கள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன்படி, நேற்று காலை முதல் வாகனங்களுக்கான சுங்கக் கட்டணம் வசூலிக்கும் பணி துவங்கியது. சுங்கக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என போராட்டம் நடத்தப்படும் என சில அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருந்ததையடுத்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் நேற்று முன்தினம் தேனி மாவட்ட போலீஸ் எஸ்.பியிடம் பாதுகாப்பு கேட்டு மனு அளித்திருந்தனர்.

இதனையடுத்து, நேற்று சுங்கச்சாவடியில் வீரபாண்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் வாகன ஓட்டிகள் சுங்கக் கட்டணத்தை வரிசையில் நிறுத்தி செலுத்தி வி்ட்டு சென்றனர். ஒரு முறை மட்டும் பயணிக்க கார், ஜீப், மற்றும் இலகுரக வாகனங்கள், கட்டணம் செலுத்தியதில் நேரத்தில் இருந்து 24 மணி நேரத்திற்குள் திரும்ப பயணிக்க ஒரு முறை மட்டும் பயணிக்கும் வாகனங்கள், ஒரு மாதத்திற்கு 50 தடவைகள் ஒரு முறை பயணம் செய்யும் வாகனங்கள், சுங்கச்சாவடி அமைந்துள்ள மாவட்டத்தில் பதிவு செய்துள்ள வணிக வாகனங்கள் , வணிக உபயோகம் அல்லாத உள்ளூர் வாகனங்கள் என வகைப்படுத்தப்பட்டு கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன.

Related Stories: