பெட்டிக்கடை உரிமையாளர் கொலை உறவினருக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: பெட்டிக்கடை உரிமையாளரை கத்தியால் குத்திக் கொலை செய்த உறவினருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள கைலாசம் தெருவில் வசித்து வந்தவர் பெருமாள். இவர், தனது குடியிருப்பு முன் சிறிய பெட்டிக்கடை நடத்தி வந்தார். கடந்த 2019ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி பெருமாளின் உறவினர் ஆனந்தி என்பவர் கடை அருகில் உட்கார்ந்திருந்த போது அங்கு வந்த ஆனந்தியின் தந்தை ஏழுமலை மகள் ஆனந்தியை ஆபாசமாக திட்டியுள்ளார். இதனை பெருமாள் தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்த ஏழுமலை, பெருமாளிடம் தகராறு செய்துள்ளார். அங்கிருந்து கோபமாக சென்ற ஏழுமலை, சிறிது நேரத்துக்குப் பின் மீண்டும் அங்கு வந்து, பெருமாளை தகராறுக்கு இழுத்து மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.

அதை தடுக்க வந்தவர்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். படுகாயமடைந்த பெருமாள் ரத்த ெவள்ளத்தில் இறந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக தண்டையார்பேட்டை போலீசார் பதிவு செய்து, ஏழுமலையை கைது செய்தனர். இந்த கொலை வழக்கு சென்னை 18வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி எல்.ஆபிரகாம்  லிங்கன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் மாநகர கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் என்.ஜெயசங்கர் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்கள், சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் ஏழுமலைக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Related Stories: