தன்னார்வ ரத்த தானத்தில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலம் தமிழ்நாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: தன்னார்வ ரத்த தானத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ரத்த தானம் மூலம் மதிக்கத்தக்க மனித உயிரை காப்பாற்றுவது புனிதமான செயலாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் திங்கள் முதல் நாள் தேசிய தன்னார்வ ரத்த தான தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான தேசிய தன்னார்வ ரத்த தான தினத்தின் கருப்பொருள் “ஒற்றுமையுடன் ரத்த தானம் செய்வோம். ஒருங்கிணைந்த முயற்சியுடன் உயிர்களைக் காப்போம்” என்பதாகும்.

அறிவியலில் ஏராளமான கண்டுபிடிப்புகள் நிகழ்த்தி இருந்தாலும் ரத்தம் என்ற அரிய திரவத்தை இன்னும் செயற்கையாக உருவாக்க இயலவில்லை. ரத்த தானம் செய்ய 20 நிமிடங்களே ஆகும். ரத்த தானம் செய்தவுடன் வழக்கம் போல் அன்றாட வேலைகளை மேற்கொள்ளலாம். 3 மாதத்திற்கு ஒரு முறை ரத்த தானம் செய்யலாம். தானமாக பெறப்படும் ஒரு அலகு ரத்தம் 3 உயிர்களை காப்பாற்றும். அரசு ரத்த மையங்கள் மற்றும் தன்னார்வ ரத்த தான முகாம்களில் ரத்த தானம் செய்யலாம். ரத்த மையங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக e-RaktKosh என்ற வலைதளம் செயல்பாட்டில் உள்ளது. இத்தளத்தில் ரத்த தான முகாம் மற்றும் ரத்த கொடையாளர்களை பதிவு செய்து கொள்ளலாம், ரத்த வகைகளின் இருப்பை தெரிந்து கொள்ளலாம். பொதுமக்கள் இத்தளம் மூலம் ரத்தம் பெற்றுக் கொள்ளலாம்.

ஆண்டுதோறும் ரத்த கொடையாளர்கள் மற்றும் ரத்த தான முகாம் அமைப்பாளர்களை தமிழ்நாடு அரசு பாராட்டி சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கி கௌரவித்து வருகிறது.  கடந்த ஆண்டு அரசு மற்றும் தனியார் ரத்த மையங்கள் மூலம் 90 விழுக்காடு ரத்தம் சேகரிக்கப்பட்டு தன்னார்வ ரத்த தானத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. நடப்பு ஆண்டில் தன்னார்வ ரத்த தானத்தில் தமிழ்நாடு 100 விழுக்காடு இலக்கை எய்திடவும், விலைமதிப்பற்ற உயிர்களை காப்பாற்றிட பொதுமக்கள் அனைவரும் பெருமளவில் தன்னார்வ ரத்த தானம் செய்திடவும் முன்வர வேண்டும். மகிழ்வுடன் இரத்த தானம் செய்திடுவோம்; மனித உயிர்களை காத்திடுவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* ரத்த கொடையாளர்களுக்காக தனி செயலி

ரத்தம் தேவைப்படும் நோயாளிகளுக்கு எளிதில் ரத்தம் கிடைப்பதை உறுதி செய்யும் பொருட்டு தொடர் தன்னார்வ ரத்த  கொடையாளர்களின் விவரங்களை பதிவு செய்ய கணினிமயமாக்கப்பட்ட பதிவேடும் மற்றும் செயலியும் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Stories: