சிறுவம்பார்-எடச்சித்தூர் வாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

விருத்தாசலம்: மங்கலம்பேட்டை அருகே சிறுவம்பார் ஊராட்சியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி அமைந்துள்ளது. இதன் மூலம் அப்பகுதி விவசாயிகள் சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் விலை நிலங்களில் நெல், கரும்பு, மணிலா உள்ளிட்ட பயிர்களை விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஏரியின் அருகில் விவசாய நிலம் வைத்திருப்பவர்கள் ஏரியை ஆக்கிரமித்து வருவதால் தற்போது சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் மட்டும்தான் ஏரி காணப்படுகிறது. மேலும் ஏரிக்கு நீர் வரத்து வரும் வாய்க்கால்களை பலர் ஆக்கிரமித்து வருவதால் ஏரிக்கு தண்ணீர் வருவதும் தற்போது தடைபட்டுள்ளது.

அதுபோல் ஏரியிலிருந்து வெளியேறும் சிறுவம்பார்- எடச்சித்தூர் வரை செல்லும் வாய்க்கால் பல ஆண்டுகளாக தூர் வாராமல் இருப்பதால் வாய்க்காலில் புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேற வழி இல்லாமல் மக்கள் குடியிருக்கும் குடியிருப்பு பகுதிகளுக்குள் செல்லும் அபாயம் இருந்து வருகிறது. கடந்த சில மாதத்திற்கு முன், வாய்க்கால் தூர் வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது அப்போது சுமார் 100 மீட்டர் மட்டுமே தூர்வாரப்பட்டது. அதனை தொடர்ந்து அப்பணி

முழுவதும் முடிவு பெறாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மீதம் உள்ள பகுதிகளிலும் தூர்வாரி அந்த வாய்க்காலை சீர்படுத்தி தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் மழைக் காலம் வரவிருக்கும் நிலையில் இந்த வாய்க்கால்கள் தூர் வாரவில்லை என்றால் மழைக்காலத்தில் வரும் தண்ணீர் முழுவதும் குடியிருப்பு பகுதிக்கு செல்லும் நிலை உள்ளது.

இதனால் வாய்க்காலை தூர்வாரி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் ஏரி மற்றும் வாய்க்காலை சுற்றி ஆக்கிரமித்துள்ள பகுதிகளை அளவீடு செய்து அகற்றி தர வேண்டும் எனவும்

வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: