உற்பத்தி, வர்த்தகம், தொழிலில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது: செங்கல்பட்டில் ஸ்மார்ட் போன் தொழிற்சாலையை திறந்து வைத்து முதலமைச்சர் பேச்சு..!!

செங்கல்பட்டு: உற்பத்தியில், வர்த்தகத்தில், தொழிலில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டில் ஸ்மார்ட் போன் தொழிற்சாலையை திறந்து வைத்து முதலமைச்சர் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,

ஸ்மார்ட் போன் தொழிற்சாலை தொடக்க விழா:

பெகாட்ரான் நிறுவனம் பல நாடுகளில் தொழிற்சாலைகளை தொடங்கி ஏராளமானவர்களுக்கு வேலை வழங்கி வருகிறது. உலக புகழ்பெற்ற தைவான் நிறுவனம் தமிழ்நாட்டில் வந்து செல்போன் உற்பத்தியை தொடங்குவது பெருமை அளிக்கிறது.

ரூ.1200 கோடி முதலீட்டில் ஸ்மார்ட் போன் தொழிற்சாலை:

பெகாட்ரான் நிறுவனம் ரூ.1200 கோடி முதலீட்டில் தொழிற்சாலையை தொடங்கி உள்ளது. தைவான் நிறுவனம் தமிழ்நாட்டில் மேலும் பல தொழிற்சாலைகளை தொடங்க வேண்டும். புதிய தொழிற்சாலை மூலம் 14,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து சேவையை நாங்கள் கடமையாக செய்கிறோம். பெண் தொழிலாளர்களுக்கு பெரும்பாலும் வேலை வழங்கப்படும் என்று பெகாட்ரான் நிறுவனம் கூறியுள்ளது. புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்குவதன் மூலம் அந்த வட்டாரம், மாவட்டம் வளர்ச்சி அடைகிறது. பெண்களை அதிக அளவில் பணியமர்த்தினால் தமிழ்நாடு அரசு பல மானியங்களை வழங்க பரிசீலித்து வருகிறது.

எளிதில் வணிகம் செய்ய உகந்த மாநிலம் தமிழ்நாடு:

அகில இந்திய அளவில் வணிகம் செய்வதில் எளிதான மாநிலம் என்ற பட்டியலில் தமிழ்நாடு இடம்பெற்றுள்ளது. முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் பெரிதும் விரும்பும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. புத்தாக்க தொழில்களில் ஆர்வம் காட்டி வருகிறோம். உற்பத்தியில், வர்த்தகத்தில், தொழிலில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்று பெருமிதம் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர், தமிழ்நாடு மின்னணு வணிக தொழில் கொள்கை விரைவில் வெளியிடப்படும். எந்த துறையாக இருந்தாலும் அந்த துறையில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக வேண்டும். தமிழ்நாட்டில் செமிகண்டக்டர் உற்பத்தி தொடர்பாக தொழில் நிறுவனம் ஒன்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

Related Stories: