கலவரத்திற்குள்ளான கள்ளக்குறிச்சி பள்ளியை அரசு நடத்த கோரிய வழக்கு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கலவரத்துக்குள்ளான கள்ளக்குறிச்சி பள்ளியை அரசு ஏற்று நடத்தக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி  அரசு ஏற்று நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரி தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், பள்ளி விடுதிக்கு அங்கீகாரம் பெறாததால் பள்ளியை அரசு ஏற்று நடத்த கோரி செப்டம்பர் 14ம் தேதி மனு அளித்தும் அது பரிசீலிக்கப்படவில்லை. மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சிறப்பு அதிகாரியை நியமித்து பள்ளியை அரசு தன் கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு  பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி டி.கிருஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான தனியார் பள்ளிகளில் ஒவ்வொரு பள்ளியிலும், ஒவ்வொரு விதமான பிரச்னைகள் உள்ளன. அதற்காக அவற்றை அரசு ஏற்க வேண்டும் என்று கோர முடியுமா, அரசே ஏற்க வேண்டும் என்றால் நிலம், கட்டிடங்களுக்கு விலை கொடுக்க வேண்டும், ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டும் என்பது போன்ற விஷயங்கள் இருக்கிறது தெரியுமா என்று மனுதாரரிடம் கேள்வி எழுப்பினர். பின்னர், இந்த மனுவில்  நியாயமான காரணம் எதுவும் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து  உத்தரவிட்டனர்.

Related Stories: