திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தில் மூன்றாவது நாள் முத்து பந்தல் வாகனத்தில் ஸ்ரீ தேவி பூதேவி தாயார்களுடன் எழுந்தருளிய மலையப்ப சுவாமி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தில் மூன்றாவது நாள் முத்து பந்தல் வாகனத்தில் ஸ்ரீ தேவி பூதேவி தாயார்களுடன் எழுந்தருளினார் மலையப்ப சுவாமி

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 27 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பெரிய சேஷம், சின்ன சேஷம், அன்னம், சிம்ம வாகனத்தில் சுவாமி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலீத்தார்.

மூன்றாவது நாளான இன்று இரவு முத்து எப்படி பரிசுத்தமானதோ அதை போன்று நம் மனதில் உள்ள தீய எண்ணங்கள் இல்லாமல் பரிசுத்தமாக இறைவனை அடைய வணங்கினால் முக்தி பெறலாம் என்பதை விளக்கும் வகையில் முத்து பந்தல் வாகனத்தில் மலையப்ப சுவாமி தயார்களுடன் பக்தர்களின் கோவிந்தா கோஷத்திற்கு இடையே நான்கு மாடவீதியில் வலம் வந்தார்.

வீதிஉலாவில் யானை, குதிரை, காளைகள் அணிவகுத்து வர அன்னமைய்யா, தாச சாகீத்தியா, திட்டத்தின் சார்பில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் மகா விஷ்ணுவின் பல்வேறு அவதாரங்களை குறிக்கும் விதமாக வேடமணிந்தும், கோலாட்டம், தப்பாட்டம் மற்றும் லம்பாடிகள் நடனம் ஆடியபடி வீதிஉலாவில் பங்கேற்றனர்.

*நாளை காலை கற்பக விருட்ச வாகனம்

சொற்கத்தில் தேவர்களுக்கு கேட்கும் வரங்களை தருவது கற்பக விருட்சம் மரம். அது போன்று கலியுகத்தில் தன் பக்தர்களுக்கு கேட்கும் வரங்களை தரக்கூடிய வகையில் மலையப்ப சுவாமி ஸ்ரீ தேவி, பூதேவி தயார்களுடன் பிரம்மோற்சவத்தின் நான்காவது நாளான நாளை காலை கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ளார்.

 5 ம் நாள் பிரம்மோற்சவத்தில் மோகினி அலங்காரத்திற்காகவும், கருட சேவையையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து கிளியுடன் கூடிய மாலையை  தமிழக இந்த அறநிலை துறை அதிகாரிகளால் நாளை மதியம் கொண்டு வந்து சமர்ப்பிக்கப்பட உள்ளது. இரவு சர்வ பூபால வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது.

Related Stories: