அடுக்குமாடி குடியிருப்பில் போதைப்பொருள் பறிமுதல்: கேளம்பாக்கம் அருகே வாலிபர் கைது

திருப்போரூர்: கேளம்பாக்கம் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் அரியவகை போதைபொருள் பயன்படுத்திய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 25 ஆயிரம் மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை புறநகர் பகுதியான கேளம்பாக்கம் பகுதியில்  போதைப்பொருள் நடமாட்டம் இருப்பதாக கேளம்பாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி கேளம்பாக்கம் குற்றப்பிரிவு ஆய்வாளர் கிளாட்ஸன் ஜோஸ் தலைமையிலான போலீசார் கேளம்பாக்கம் அடுத்த தையூர் செங்கண்மால் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த வாலிபர் ஒருவர் அரிய வகை போதை பொருளான மெத்தம் பெட்டமைன்  பயன்படுத்தியது தெரியவந்தது.

இதையடுத்து அவரிடம் இருந்து 7 கிராம்  போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மணிகண்டன் (29) என்பதும் இவரது பெற்றோர் மகாராஷ்டிர மாநிலம் மேற்கு மும்பை பகுதியில்  வசித்து வருவதும், சொந்த தொழில் துவங்குவதற்காக கேளம்பாக்கம் பகுதியில் தங்கியிருப்பதும்  விசாரணையில் தெரியவந்துள்ளது.  

அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருளின் மதிப்பு 25 ஆயிரம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் இவருக்கும், போதை கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா? என்பது பற்றியும் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் கேளம்பாக்கம் பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: