செம்மஞ்சேரி, நூக்கம்பாளையம், பெரும்பாக்கம், வேளச்சேரி, பள்ளிக்கரணை, அடையாறு ஆகிய இடங்களில் ரூ.174.48 கோடி மதிப்பீட்டிலான வெள்ளத் தடுப்புப் பணிகள்: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (29.9.2022) நீர்வளத்துறை, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறை ஆகிய துறைகளின் சார்பில் செம்மஞ்சேரி, நூக்கம்பாளையம், பெரும்பாக்கம், வேளச்சேரி, பள்ளிக்கரணை, அடையாறு ஆகிய இடங்களில் 174.48 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான வெள்ளத் தடுப்புப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை நேரடியாக சென்று ஆய்வு செய்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்தி, போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டு, பணிகளும் விரைவாக நடைபெற்றன.

வரும் பருவமழை காலங்களில் மழை வெள்ளப் பாதிப்புகள் ஏற்படாத வகையில் அதிக அளவில் நீர் தேங்கும் இடங்களில் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டு தற்போது அப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நீர்வளத்துறை சார்பில் செம்மஞ்சேரி DLF அருகில், ரூ.21.70 கோடி மதிப்பீட்டில் மதுரபாக்கம் ஓடையில் ஒரு கதவணையுடன் கூடிய வெள்ள ஒழுங்கி (Head Regulator) அமைத்து DLF குடியிருப்பு பகுதிக்கு இடையில் செல்லும் சாலை வழியாக 500 மீட்டர் நீளத்திற்கு மூன்று கண் உடைய பெரு மூடுவடிகால்வாய் (Cut and Cover Macro Drain) அமைக்கும் பணிகளையும்;

நூக்கம்பாளையம் பாலம் அருகில், அரசன்கழனி கால்வாயிலிருந்து பொலினினி குடியிருப்பு பகுதி மற்றும் தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு குடியிருப்பு கட்டடம் மற்றும் செம்மஞ்சேரி கால்வாயின் இருபுறமும் நூக்கம்பாளையம் பாலம் வரை ரூ.24.30 கோடி மதிப்பீட்டில் 1900 மீட்டர் தாங்குசுவர் (Retaining Wall) அமைத்தல் மற்றும் தூர்வாரும் பணிகளையும்; நேதாஜி நகர் பிரதான சாலை, பொலினினி குடியிருப்பு அருகில் அரசங்கழனி வேலன் தாங்கல் ஏரியில் கதவணையுடன் கூடிய வெள்ள ஒழுங்கி அமைத்து அரசன்கழனி ஏரியிலிருந்து கழுவெளி வரை ரூ.29 கோடி மதிப்பீட்டில் ஒரு பெரு மூடு வடிகால்வாய் 970 மீட்டர் நீளத்திற்கு அடித்தள கான்கிரீட்டுடன் கம்பி மற்றும் சுவர் அமைக்கும் பணிகளையும்;

பள்ளிக்கரணை தாமரைக்குளம் அருகில், பள்ளிக்கரணை அணை ஏரியிலிருந்து வெளியேறும் வெள்ள நீரினை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு கொண்டு செல்ல ஏதுவாக ரூ.57.70 கோடி மதிப்பீட்டில் பள்ளிக்கரணை அணை ஏரியிலிருந்து பள்ளக்கரணை சதுப்பு நிலம் வரையில் மூடிய பெரு வடிகால்வாய் அமைக்கும் பணிகளையும்; பின்னர், நெடுஞ்சாலைத் துறை சார்பில் வேளச்சேரி தாம்பரம் சாலையில், தாமரைக்குளம் முதல் பள்ளிக்கரணை NIOT (National Institute of Ocean Technology) வரை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை வெள்ள நீர் சென்றடையும் வகையில் 1000 மீட்டர் நீளத்திற்கு ரூ.20 கோடி மதிப்பீட்டில் வடிகால் அமைக்கும் பணிகளையும்;

தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் வேளச்சேரி, ஏஜிஎஸ் காலனி 4-வது பிரதான சாலையில், ஏஜிஎஸ் காலனி 1 முதல் 4 பிரதான சாலைகள் 6வது குறுக்கு தெரு மற்றும் 7வது குறுக்கு தெரு வரையிலான மொத்த பகுதிகளை இணைத்து ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் வடிவமைக்கப்பட்டு 6 தெருக்களில் சுமார் 1620 மீட்டர் நீளத்திற்கு ரூ.5.18 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகளையும்; அடையாறு, கஸ்தூரிபாய் நகர் 3-வது பிரதான சாலையில், திருவேங்கடம் தெரு, கோவிந்தராஜபுரம் 1வது, 2வது தெரு, கஸ்தூரிபாய் நகர் 1வது தெரு மற்றும் கஸ்தூரிபாய் நகர் 3வது பிரதான சாலைகளை இணைத்து சிதலமடைந்த பழைய கால்வாய்களை இடித்து புதிய ஒருங்கிணைந்த கால்வாய்கள் வடிவமைக்கப்பட்டு 5 தெருக்களில் சுமார் 1085 மீட்டர் நீளத்திற்கு ரூ.2.22 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகளையும்;

அடையாறு, இந்திரா நகர் 3-வது பிரதான சாலையில், இந்திரா நகர், திருவான்மியூர் கண்ணப்பன் நகர், கணேஷ்நகர், காமராஜ் நகர், இந்திரா நகர் பிரதான சாலைகளை இணைத்து சிதலமடைந்த பழைய கால்வாய்களை இடித்து புதிய ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் வடிவமைக்கப்பட்டு, வெள்ள நிவாரண  நிதியின்கீழ் 21 தெருக்களில் சுமார் 4895 மீட்டர் நீளத்திற்கு ரூ.14.38 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகளையும்; என மொத்தம் 174.48 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணிகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இப்பணிகள் அனைத்தையும் அக்டோபர் மாதத்திற்குள் விரைவாகவும், தரமாகவும் முடித்திட வேண்டும் என்று தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வின்போது, மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் திரு. துரைமுருகன், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு. கே.என். நேரு, மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. தா.மோ. அன்பரசன், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. எஸ்.எஸ். பாலாஜி, திரு. அரவிந்த் ரமேஷ், நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. சந்தீப் சக்சேனா, இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் / முதன்மைச் செயலாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., கண்காணிப்பு அலுவலர் திரு.கொ. வீரராகவ ராவ், இ.ஆ.ப., செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.ர. ராகுல்நாத், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: