ஆயுதபூஜையை முன்னிட்டு பொரி உற்பத்தி தீவிரம்: நடப்பாண்டில் மூட்டைக்கு ரூ.100 அதிகரிப்பு

சேலம்: ஆயுதபூஜையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பொரி உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கடந்தாண்டைவிட நடப்பாண்டு மூட்டைக்கு ரூ.100 அதிகரித்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். ஒவ்வொரு ஆண்டும் ஆயுதபூஜை நாளான்று வீடுகள், தொழிற்சாலைகள், மெக்கானிக் கடைகள், பட்டறைகள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் ஆயுதங்களை சுத்தம் செய்து, அவற்றுக்கு திருநீரால் பட்டையிட்டு, சந்தனம், குங்குமம் இட்டு பொரி, தேங்காய், பழம், எலுமிச்சை பழம் மற்றும் பலவகையான பழங்களை வைத்து சரஸ்வதிக்கு பூஜை செய்வது வழக்கம்.

அந்த வகையில், நடப்பாண்டு ஆயுதபூஜை 4ம் ேததியும், விஜயதசமி 5ம் தேதியும்  கொண்டாடப்படுகிறது. ஆயுதபூஜைக்கு இன்னும் சிலநாட்களே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பொரி உற்பத்தி செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தொழிலாளர்கள் மும்முரமாக பொரி உற்பத்தி செய்து வருகின்றனர். உற்பத்தி செய்யப்பட்ட பொரி அவ்வப்போது விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.

இது குறித்து சேலம் அம்மாப்பேட்டையை சேர்ந்த பொரி உற்பத்தியாளர் சோமசுந்தரம் கூறியதாவது:

ஆண்டு முழுவதும் பொரி உற்பத்தி செய்து வருகிறோம். காரப்பொரி, சாதாரண வெள்ளை பொரியை நாங்கள் உற்பத்தி செய்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் ஆயுதபூஜைக்கு ஒரு மாதத்திற்கு முன்பே பொரி உற்பத்தி செய்யும் பணியை தீவிரப்படுத்துவோம். இண்டால் 64 என்ற அரிசியில் பொரி உற்பத்தி செய்கிறோம். முதலில் அரிசியை உப்பு தண்ணீர், சோடா மாவு, உப்பு உள்ளிட்டவைகள் சேர்த்து  இரண்டு, மூன்று வெயிலில் காய வைப்போம். பின்பு அரிசியில் சோடா மாவு, உப்பு, சர்க்கரை உள்ளிட்ட மூன்றும் கலந்து வடைச்சட்டியில் மணலுடன் கலந்து வறுத்ததால், ெபாரியாக வந்துவிடும்.

இவ்வாறு பொரிக்கப்பட்ட எட்டரை கிலோ கொண்ட 60 பக்கா பொரியை ஒரு மூட்டையாக கட்டி விற்பனைக்கு அனுப்புவோம். நடப்பாண்டு ஆயுதபூஜையை முன்னிட்டு சேலம் சுற்று வட்டார பொரி வியாபாரிகள் மற்றும் தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பொரி கேட்டு ஆர்டர் தந்துள்ளனர். இதேபோல் சேலம் மாவட்டத்தில் பல பகுதிகளில் ஆர்டர் வந்துள்ளது. ஆயுதபூஜை நெருங்குவதால் பொரி உற்பத்தியை தீவிரப்படுத்தியுள்ளோம். அவ்வப்போது உற்பத்தி செய்யப்படும் பொரி விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

ஆயுதபூஜைக்கு முதல் நாள் வரை பொரியை உற்பத்தி செய்வோம். 60 பக்கா கொண்ட ஒரு மூட்டை கடந்தாண்டு (மொத்த விலையில்) ரூ.400 என விற்பனை செய்தோம். நடப்பாண்டு அரிசி விலை அதிகரித்த காரணத்தால், ஒரு மூட்டைக்கு ரூ.100 அதிகரித்து, ரூ.500 என விற்பனை செய்கிறோம். தமிழகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட பொரி உற்பத்தி செய்யும் ெதாழிற்சாலைகள், சிறு, சிறு ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் நடப்பாண்டும் மட்டும் ஆயிரம் டன் பொரி உற்பத்தி செய்யப்படும். எங்களை போன்ற சிறு ஆலைகளில் நாள் ஒன்றுக்கு 20 முதல் 30 மூட்டை பொரி உற்பத்தி செய்து வருகிறோம். பொரி உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் நாள் ஒன்றுக்கு 200 முதல் 250 மூட்டை உற்பத்தி செய்யப்படுகிறது.

இவ்வாறு சோமசுந்தரம் கூறினார்.

நோயில் இருந்து காக்கும் உணவு

‘‘தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் மழைக்காலமாகும். இந்த காலக்கட்டத்தில் தொற்றுநோய் பரவும். அன்றைய காலகட்டத்தில் தொற்றுநோய்க்கு ஊசி எதுவும் இல்லை. இதுபோன்ற நோயில் இருந்து மக்களை காப்பாற்றவே, அப்போது ஆயுதபூஜை நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. மக்கள் கூடும் இடத்தில் ஆயுதபூஜை நிகழ்ச்சி நடத்தப்பட்டு, தொற்று ஏற்படாமல் இருக்க பொரி வழங்கப்பட்டது. இந்த பொரியில் எவ்வித உரமோ, கலப்படமோ செய்வதில்லை. இதில் அதிகபட்சமாக உப்பு மட்டுமே சேர்க்கப்படுகிறது.

உப்பு கலந்த பொரியை சாப்பிடும் மக்களுக்கு நோய் எதிர்ப்புச்சக்தி கூடும். தொற்றுநோயில் இருந்து தற்காத்துகொள்ள முடியும். இதற்காகவே ஆயுதபூஜையில் படையலிட்டு பொரி வழங்குவதை மக்கள் கடைப்பிடித்து வந்தனர். ஆனால் இன்றைய நவீன காலக்கட்டத்தில் ஏராளமான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாகரீகம் என்ற பெயரில் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட பொரியை சிலர் வேண்டாத பொருளாக கருதி வருகின்றனர். பொரியை போன்று மருத்துவக்குணம் கொண்ட உணவுப்பொருளை ஒதுக்கியதால், இன்று மழைக்காலத்தில் ஏராளமான நோயால் அவதிப்பட்டு வருகிறோம்,’’ என்றும் உற்பத்தியாளர்கள் கூறினர்.

Related Stories: