கொடைக்கானலுக்கு செல்லும் மாற்று வழித்தடம் பெரியகுளம்-அடுக்கம் மலைச்சாலை மறுசீரமைக்கப்படுமா?... சுற்றுலாப்பயணிகள் எதிர்பார்ப்பு

பெரியகுளம்: கொடைக்கானலுக்கு செல்லும் முக்கிய வழித்தடமான பெரியகுளம்-அடுக்கம் மலைச்சாலை சீரமைக்கப்பட்டு பொதுபோக்குவரத்திற்கு அனுமதிக்கப்படுமா என சுற்றுலாப்பயணிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர். தென்னிந்தியாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கொடைக்கானலுக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வத்தலகுண்டு- காட்ரோடு-டம்டம்பாறை வழியாகவும், பழனி- பெருமாள் மலை வழியாகவும் இரு பாதைகள் வழியாக கொடைக்கானல் செல்லலாம்.

இந்நிலையில், பெரியகுளத்தில் இருந்து கும்பக்கரை- அடுக்கம்- பெருமாள் மலை வழியாக பொது போக்குவரத்து ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கடந்த 1984 ஆம் ஆண்டு எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் இந்த பாதைக்கான திட்டம் வகுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ரூ.129 கோடி செலவில் இந்த மலைச்சாலை அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டு நீண்ட காலமாக சாலை அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்நிலையில் 2010ம் ஆண்டு அடுக்கம் வழியாக கொடைக்கானல் செல்லும் பாதை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது. ஆனால் சரியான திட்டமிடல் இல்லாமல் குறுகிய அளவில் சாலை அமைக்கப்பட்டது. இதனால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விட முடியாத அளவில் சிறிய பாதையாக அமைந்ததால் வாகனஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.  மேலும் குறுகிய பாதை வழியாக கனரக வாகனங்கள் செல்ல முடியாது. டூவீலர்கள் மற்றும் கார் போன்ற வாகனங்கள் மட்டுமே செல்ல முடியும்.

இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என நினைத்த நெடுஞ்சாலை துறையினர் மற்றும் வனத்துறையினர் பெரியகுளம் அடுக்கம் சாலையை மீண்டும் சீரமைத்து கனரக வாகனங்கள் செல்லும் படி வடிவமைக்க வேண்டும் என திட்டமிட்டிருந்தனர். இதனால் இந்தப் பாதை வழியாக சிறிய ரக வாகனங்களும் இருசக்கர வாகனங்கள் மட்டுமே செல்லும் நிலை ஏற்பட்டது. கனரக வாகனங்கள் செல்ல வேண்டும் என்றால் இந்த சாலையை மறுசீரமைப்பு செய்ய வேண்டும்.அதற்காக மறுபடியும் மலைச்சாலை அமைக்கும் திட்டம் போட வேண்டும் என்பதால் இந்த பணி கடந்த 10 ஆண்டுகளாக அப்படியே கிடப்பில் போடப்பட்டது.

மேலும் இந்த சாலையில் மழைக்காலங்களில் மண்சரிவு போன்று சேதம் ஏற்பட்டால் தற்காலிக சீரமைப்பு பணிகள் மட்டுமே நடைபெறும். தற்பொழுது பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தென்மேற்கு பருவமழை துவங்கிய காலத்தில் பெய்த கனமழையால் இந்த சாலை இரண்டு இடங்களில் ராட்சத பாறைகள் உருண்டும் மண்சரிவு ஏற்பட்டும் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலை துறையினர் சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடை விதித்து சாலைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். தற்பொழுது நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்டும் ஜேசிபி இயந்திரங்கள் மூலமாகவும் சாலையை தற்காலிகமாக சரி செய்து இலகு ரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுற்றுலாப் பயணிகள் மழைக்காலங்களில் கொடைக்கானல் செல்ல இரு பாதைகள் வத்தலகுண்டு- காட்ரோடு-டம்டம்பாறை வழியாகவும்,பழனி- பெருமாள் மலை வழியாகவும் செல்ல முடியாத நிலை ஏற்படும் சூழலில் இந்த அடுக்கம் சாலையை பயன்படுத்தலாம் என்ற முறையிலேயே இந்த சாலை அமைக்கும் திட்டம் துவங்கியது.

ஆனால் தற்பொழுது இந்தப் பாதையும் சரி செய்ய முடியாமல் தற்காலிக சீரமைப்பு பணிகளால் தொய்வடைந்து வருகிறது. எனவே இந்த பாதையை மறுசீரமைப்பு செய்து போக்குவரத்து நெரிசல் இல்லாமல் செல்வதற்கு அரசு வழிவகை செய்ய வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது. மேலும் கனரக வாகனங்கள் மட்டுமல்லாது, பெரியகுளம் வழியாக கொடைக்கானலுக்கு பேருந்து வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேருந்து இயக்க வேண்டும்

இது குறித்து நகர் நலசங்க செயலாளர் அன்புக்கரசன் கூறுகையில், ‘‘ பெரியகுளம்- அடுக்கம் சாலையில் பொது போக்குவரத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பாதையினை சரி செய்து நிரந்தரமான பணிகள் செய்து இந்தப் பாதையில் பொது போக்குவரத்து மற்றும் கனரக வாகனங்கள் செல்ல வழிவகை செய்ய வேண்டும். மேலும் பேருந்து வசதி மற்றும் கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படும் பட்சத்தில் கொடைக்கானலில் விளையும் விவசாய விளைபொருட்களை பெரியகுளம் மற்றும் தேனி மாவட்ட சந்தைக்கு கொண்டு வருவதற்கு விவசாயிகளுக்கு எளிதாக இருக்கும்.

மேலும் இந்தப் பாதை வழியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து செல்பவர்கள் கும்பக்கரை அருவி போன்ற சுற்றுலாத்தலங்களையும் பார்வையிட்டு செல்லும் நிலை ஏற்படும். இதன்மூலம் பெரியகுளம் வணிக ரீதியாக பொருளாதார முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே திமுக ஆட்சிக் காலத்தில் இந்த அடுக்கம்- கொடைக்கானல் சாலையை நிரந்தரமான பணிகள் செய்து சீரமைத்து அதில் பொது போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது’’ என்றார்.

Related Stories: