காய்ச்சல் காரணமாக அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மருத்துவமனையில் அனுமதி

சென்னை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் பருவநிலை மாற்றம் தொடங்கியுள்ளதால் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த காய்ச்சல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்து வருகிறது. இதற்கிடையே பலர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் நிலையும்  ஏற்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் அமைச்சர்கள், அதிகாரிகள் தொடர்ந்து தங்கள் பணியை தொய்வில்லாமல் செய்து வருவதால் அவர்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்படத் தொடங்கியுள்ளது.

நேற்று முன்தினம் காலை சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்துக்கு பிறகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி  திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் ஆழ்வார்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் மேற்கொண்ட மருத்துவ  பரிசோதனையில், அமைச்சருக்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அதனால் அமைச்சர் சில நாட்கள் அங்கு தங்கி சிகிச்கை பெற வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் அமைச்சரின் உடல் நிலை தற்போது  நல்ல நிலையில் உள்ளதால் அவர் இரண்டொரு நாளில் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: