சாலை ஓர கடைகளுக்கு கூட்டுறவு சொசைட்டி மூலமாக 2 கிலோ, 5 கிலோ எடையுள்ள காஸ் சிலிண்டர் வழங்கப்படும்: அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

சென்னை: சாலை ஓர கடைகளுக்குகூட்டுறவு சொசைட்டி மூலமாக 2 கிலோ, 5 கிலோ எடையுள்ள காஸ் சிலிண்டர் வழங்கப்படும். இத்திட்டம் முதலில் திருவல்லிக்கேணியில் துவங்கப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தில், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் நேற்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்குவது குறித்தும், ரேசன் கடைகளில் விற்பனையாளர்கள் நியமனம் குறித்தும், கூட்டுறவு சங்கங்களை நவீனப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன், பதிவாளர் மற்றும் உயரதிகாரிகள் உடன் இருந்தனர்.

பின்னர் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நிருபர்களிடம் கூறியதாவது: நமது அரசு பொறுபேற்று குறுகிய காலத்தில், விவசாயிகளுக்கு பயிர்க்கடனாக ரூ.4 ஆயிரம் கோடிக்கு மேல் வழங்கி உள்ளது.  நகைக்கடன் தள்ளுபடி இதுவரை ரூ.4900 கோடி அளிக்கப்பட்டுள்ளது. சிலர் நகை கடன் தள்ளுபடிக்கான ரசீது கொடுக்காததால் அவர்களின் பணம் ரூ.100 கோடி அப்படியே இருக்கிறது. மகளிர் சுய உதவி குழு கடனுக்கு கிட்டத்தட்ட 15 லட்சம் பேருக்கு  ரூ.2,755 கோடி தள்ளுபடிக்கான ரசீதை அக்.10ம் தேதிக்குள் அனைவருக்கும் வழங்க  துரிதப்படுத்தப்பட்டுள்ளது. கொடைக்கானலில் தேசிய அளவில் கூட்டுறவு இன்ஸ்டிட்யூட் அமைக்கும் பணிக்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் கூட்டுறவு சொசைட்டி மூலம் முகவரி இல்லாமல் இருக்கும் சாலை ஓர கடைகளுக்கு கேஸ் சிலிண்டர் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு சொசைட்டி மூலமாக கணக்கெடுத்து அதன் அடிப்படையில் 2 கிலோ, 5 கிலோ எடையுள்ள காஸ் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.

* கூட்டுறவு சங்கங்களில் மாணவர்கள் சேர்ப்பு

கிராமப்புறங்களில் உள்ள தொடக்க  வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் பன்முகத்தன்மையோடு செயல்பட மாணவர்கள் உட்பட அனைவரையும் உறுப்பினர்களாக சேர்த்து அவர்களுக்கு தேவையான கடன் உதவிகள் வழங்கப்படும். 2000 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் மருந்துகள் 20% தள்ளுபடியில் வழங்கி வருகிறோம். இதைவிட குறைந்த விலையில் மருந்துகள் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று அமைச்சர் கூறினார்.

* ரேஷன் கடைகளில் 4,400 பேருக்கு பணி ஆணை

நியாய விலை கடைகளில் விற்பனையாளர்கள், எடையாளர்கள் குறைவாக இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 4,400 மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளது. அந்த காலிப் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு செய்தவர்களுக்கு ஜனவரி மாதம் பணி ஆணை வழங்கப்படும் என்று அமைச்சர் பெரியசாமி கூறினார்.

Related Stories: