மத நம்பிக்கை என்பது அவரவருக்கு சொந்தமானது அடுத்தவருக்கு எதிரானதாக அது என்றும் இருக்காது: தென்னிந்தியத் திருச்சபையின் பவள விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: எல்லாருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் ஆட்சியினுடைய அடிப்படை நோக்கம் ஆகும். மேலும் அவரவர் மத நம்பிக்கை என்பது அவரவருக்கு சொந்தமானதே தவிர, அடுத்தவருக்கு எதிரானதாக இருக்காது என்று தென்னிந்தியத் திருச்சபையின் பவள விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வானகரத்தில் நடைபெற்ற தென்னிந்தியத் திருச்சபையின் பவள விழாவில் கலந்து கொண்டு பேசியதாவது: தென்னிந்திய திருச்சபையின் பவளவிழாவை கடந்த ஆண்டு தொடங்கி வைத்து உரையாற்றினேன். இன்றைய தினம் நிறைவு விழாவிலும் பங்கெடுக்கக்கூடிய வாய்ப்பை பெற்றிருக்கிறேன். 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. அதற்கு அடுத்த மாதம் செப்டம்பர் 27ம் நாள் தென்னிந்தியத் திருச்சபை தொடங்கப்பட்டது.

1947ம் ஆண்டு தொடங்கப்பட்டாலும், கே.டி.பால், திருச்சபை ஒருமைப்பாட்டின் சிற்பி எனப் போற்றப்படும் ரெவரண்ட் அசரியா, சாண்டியோகா ஆகியோர் ஆரம்ப காலத்தில் இந்த முயற்சியை எடுத்துள்ளார்கள். அதாவது மொழி, நிறம், சாதி, ஏழை, பணக்காரர் என்ற பேதம் இல்லாமல், எதுவும் இல்லாததாகத் திருச்சபைகளை இணைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இதனை உருவாக்கி இருக்கிறார்கள். அதனால் தான் பல்வேறு மாநிலங்களில் மட்டுமல்லாமல், இலங்கையும் இணைந்ததாக இந்தத் திருச்சபை விளங்கி வருகிறது. 40 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட மிகப்பெரிய திருச்சபைகளில் ஒன்றாக விளங்குவதற்குக் காரணம் இந்த ஒற்றுமை உணர்வு தான். இந்தியா என்பது பல்வேறு மதத்தவர் வாழ்கின்ற நாடு, வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். வாழ்கிறோம்.

அவரவர் மத நம்பிக்கை என்பது அவரவருக்குச் சொந்தமானதே தவிர, அடுத்தவருக்கு எதிரானதாக இருக்காது. இயேசு கிறிஸ்துவின் போதனைகள் பெரும்பாலும் அன்பைப் போதிப்பதாகத்தான் இருக்கின்றன. இயேசு கிறிஸ்து இந்த மனித குலத்துக்குக் கற்றுத்தந்த மதிப்பீடுகளை வரிசைப்படுத்தினால் சமத்துவம், சகோதரத்துவம், ஒற்றுமை, இரக்கம், நீதி, தியாகம், பகிர்தல் ஆகியவற்றைத்தான் சொல்ல முடியும். மனிதர்கள் அனைவரும் சமம் என்பது தான் சமத்துவம். யாரையும் வேற்றுமையாகப் பார்க்காதே என்பது தான் சகோதரத்துவம், அனைவருடனும் சேர்ந்து வாழ் என்பது தான் ஒற்றுமை, ஏழைகள் மீது கருணை காட்டு என்பது தான் இரக்கம், அநீதிக்கு எதிராக குரல் கொடு என்பது தான் நீதி, மற்றவர்களுக்காக வாதாடு என்பது தான் தியாகம், உன்னிடம் இருப்பதை இல்லாதவருக்குக் கொடு என்பதுதான் பகிர்தல். இதைத் தான் கிறிஸ்தவம் சொல்கிறது.

இத்தகைய குணங்கள் ஒவ்வொரு மனிதருக்கும் இருந்தால் அதுதான் சமத்துவ நாடாக அமையும். இத்தகைய நோக்கம் கொண்ட திராவிட மாடல் ஆட்சியை உங்கள் அன்போடும், ஆதரவோடும் நடத்திக் கொண்டிருக்கிறோம். எல்லாருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் ஆட்சியினுடைய அடிப்படை நோக்கம். பசித்த வயிறுகளுக்கு உணவாக, தவித்த வாய்க்குத் தண்ணீராக, திக்கற்றவர்களுக்குத் திசையாக யாருமற்றவர்களுக்கு ஆறுதலாக இருக்க நினைக்கும் அரசாக எமது அரசு செயல்பட்டு வருகிறது. மன்னிக்கவும், நமது அரசு செயல்பட்டு வருகிறது. எமது அரசு என்பது அனைவரையும் உள்ளடக்கிய அரசு தான். இந்த அரசுக்கு அன்பும் உரிமையும் இரண்டு கண்கள், ஒரு கை உழைக்கவும், இன்னொரு கை உணவூட்டவுமான அரசாகச் செயல்பட்டு வருகிறோம். இயேசுவின் மலைப்பொழிவுச் சொற்பொழிவில் உள்ள வாக்கியங்களை இந்த நேரத்தில் சொல்வது பொருத்தமானதாக இருக்கும் என நினைக்கிறேன்.

75 ஆண்டுகளைக் கடந்து நிற்கும் தென்னிந்தியத் திருச்சபையானது பல நூறு ஆண்டுகளைக் காணும் என்பதில் துளி அளவும் எனக்கு சந்தேகமில்லை.

எத்தனை நூறு ஆண்டுகள் கடந்தாலும் மக்களுக்கு அன்பைப் போதிக்கும் ஒற்றுமையைப் போதிக்கும் அமைப்பாகவே இருக்கும் என்பதிலும் எனக்குச் சந்தேகமில்லை. உலகிற்கு உப்பாய் இருங்கள், உலகிற்கு ஒளியாய் இருங்கள், இது தான் என்னுடைய அன்பான வேண்டுகோள். இனிகோ இருதயராஜ்  இங்கே பேசுகின்றபோது குறிப்பிட்டுச் சொன்னார். உங்களைத்தான் நாங்கள் நம்பி இருக்கிறோம்.  உங்கள் மீது நம்பிக்கையோடு இருக்கிறோம். உங்கள் பணிகளை நீங்கள் செய்யுங்கள், நாங்கள் உங்களுக்குத் துணை நிற்கிறோம் என்கிற அந்த நம்பிக்கையை, அந்த உறுதியை இங்கே பெருமையோடு எடுத்துச் சொன்னார்கள். என்றைக்கும் அதில் எனக்கு சந்தேகம் இருந்ததில்லை. எப்படி எங்கள் மீது உங்களுக்கு சந்தேகம் இல்லையோ அதுபோல் உங்கள் மீதும் எங்களுக்கு என்றைக்கும் சந்தேகம் இருந்தது கிடையாது.

எனவே, எப்போதும் நாம் ஒருங்கிணைந்து இந்த நாட்டினுடைய ஜனநாயகத்தை, சமுதாயத்தை காப்பாற்றுவதற்கு சாதி, மதங்களைக் கடந்து நாம் நம்முடைய பணியைத் தொடர வேண்டும் என்கிற உறுதி எடுத்துக் கொள்ளக் கூடிய நிகழ்ச்சியாக இந்த பவளவிழா நிகழ்ச்சியைக் கருதிக் கொண்டிருக்கிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். விழாவில், கேரள சுகாதார துறை அமைச்சர் பீனா ஜார்ஜ், தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன், விசிக தலைவர் திருமாவளவன், தென்னிந்திய திருச்சி பிரதம பேராயர் தர்மராஜ் ரசாலம், சென்னை பேராயர் ஜார்ஜ் ஸ்டீபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: