தனிநபர் கலைக்கண்காட்சி நடத்திட ஓவிய, சிற்ப கலைஞர்களுக்கு நிதியுதவி: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தனிநபர் கலைக் கண்காட்சி நடத்திட ஓவிய, சிற்ப கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு: தமிழக அரசின் சார்பில், கலை பண்பாட்டுத் துறை, தமிழ்நாடு ஓவிய நுண்கலைக்குழுவின் மூலம், தமிழ்நாட்டில் உள்ள ஓவிய, சிற்பக் கலைஞர்களின் கலைத் திறமைகளை வெளிப்படுத்த அவர்களது கலைப்படைப்புகள் அடங்கிய கலைக் காட்சியினை தனிநபர் கண்காட்சியாக நடத்திட ஒரு நபருக்கு ரூ.25,000 வீதம் 10 கலைஞர்கள் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட கலைஞர்கள் இணைந்து கூட்டுக்கண்காட்சியாக நடத்திட ஒரு குழுவிற்கு ரூ.50,000 வீதம் 5 குழுக்கள் ஆகிய இனங்களில் அரசின் நிதியுதவி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கலைப் பண்பாட்டுத்துறை-ஓவிய நுண்கலைக் குழுவின் கலைச் செம்மல் விருது பெற்றவர்கள், கலையமைப்புகள் பெயரில் கலைக்காட்சி  நடத்துபவர்கள், தற்போது நுண்கலை பயின்று வரும் மாணவர்கள் மற்றும் இத்திட்டத்தில் பயனடைந்தோர் ஆகியோர் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கக் கூடாது. ஏனைய விண்ணப்பதாரர்கள் தங்களுடைய புகைப்படத்துடன் கூடிய தன் விவரக் குறிப்பு, சிறந்த படைப்புகளின் புகைப்படங்கள்(5 எண்ணிக்கைகள்), அவரவர்கள் படைப்பு திறன் பற்றிய செய்தித் தொகுப்புகளின் ஒளி நகல்கள் ஆகியவைகளை இணைத்து ‘‘இயக்குநர்,கலை பண்பாட்டுத் துறை, தமிழ் வளர்ச்சி வளாகம், இரண்டாம் தளம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை 600008. தொலைபேசி:044-28193195 என்ற முகவரிக்கு வருகிற 21ம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.

Related Stories: