கோபி அருகே இன்று பயங்கரம்: டாக்டரின் தாய் அரிவாளால் வெட்டி படுகொலை

கோபி: கோபி அருகே உள்ள ஒத்தகுதிரை கே.மேட்டுப்பாளையத்தில் டாக்டரின் தாயாரை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பொம்மநாய்க்கன்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கே.மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி சரஸ்வதி(88). இவர்களுக்கு சுகுமார் என்ற மகனும், ராதா என்ற மகளும் உள்ளனர் சுகுமார்(70) கோபி அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி ஓய்வு பெற்ற பின்பு சென்னையில் வசித்து வருகிறார்.

மகள் ராதா, கோபியை சேர்ந்த பிரபல மருத்துவர் நித்தியானந்தாவை திருமணம் செய்து கொண்டு கோபியில் வசித்து வருகிறார். இவர்களது மகள் காயத்ரி (38) பெங்களூரூவில் வசித்து வருகிறார். சரஸ்வதியின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்ட நிலையில், கே. மேட்டுப்பாளையத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார். வழக்கம் போல் சரஸ்வதி இன்று காலை வாசல் தெளித்து கோலம் போட வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த மர்ம நபர் சரஸ்வதியை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.

இதில் தலை, கழுத்து தோள் உள்ளிட்ட பகுதிகளில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதை சரஸ்வதி தடுக்கவே  இடது கையில் அரிவாள் வெட்டு விழுந்ததில் இடதுகை இரண்டாக பிளந்தது. சரஸ்வதியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் கோபியில் வசிக்கும் அவரது மகள் ராதாவிற்கு தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து வீட்டிற்கு வந்த ராதா அருகில் இருந்தவர்கள் உதவியுடன் சரஸ்வதியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக கோபியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே சரஸ்வதி உயிரிழந்தார். இதை தொடர்ந்து கோபி அரசு மருத்துவமனைக்கு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கொண்டு சென்ற போது, சரஸ்வதியின் உறவினர்கள் அவரது உடலை வீட்டிற்கு கொண்டு செல்லுமாறு கூறி உள்ளனர். உடனடியாக ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சரஸ்வதியின் சடலத்தை கே.மேட்டுப்பாளையத்தில் உள்ள வீட்டிற்கு கொண்டு் சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து கோபி போலீசார் கே.மேட்டுப்பாளையத்துக்கு விரைந்து வந்தனர்.

போலீசார் வரும் போது சரஸ்வதியின் உடைகளை மாற்றி, கொலையை மறைப்பதற்கான வேலைகள் நடைபெற்று வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்துக் கொண்டிருந்த போது அங்கிருந்த சிலர், சரஸ்வதி வாசல் படியில் இருந்து தடுமாறி கீழே விழுந்து இறந்து விட்டதாகவும், கொலை என கூறியது யார்? என மிரட்டி உள்ளனர். இதை தொடர்ந்து போலீசார் அதிரடியாக வீட்டிற்குள் புகுந்து பார்த்த போது அரிவாள் வெட்டுக்களை மறைத்து இயற்கை மரணம் போல் அவரது மகள் ராதாவும், சிலரும் தயார் செய்து கொண்டு இருந்தனர்.

இதை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து ராதாவிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, இன்று காலை சரஸ்வதி கீழே விழுந்து கிடப்பதாக அருகில் இருந்தவர்கள் கூறியதாகவும், அதைத்தொடர்ந்து ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், தனது தாயார் கொலை செய்யப்பட்டதாக தெரியவில்லை என்றும், வாசல்படியில் தடுமாறி விழுந்து இறந்து விட்டதாக தகவல் கிடைத்ததாலேயே அடக்கம் செய்ய நடவடிக்கை எடுத்ததாக கூறினார்.

இதை தொடந்து போலீசார் சரஸ்வதியின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். சரஸ்வதி சொத்துக்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: