மாசுகட்டுப்பாட்டு வாரிய கருத்தரங்கு தூய்மையான தமிழ்நாடே அரசின் இலக்கு: அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் உறுதி

சென்னை: பிளாஸ்டிக்கை ஒழித்து பசுமையான, தூய்மையான தமிழ்நாடு என்பதே அரசின் இலக்கு என்ற உறுதி மொழியை அமைச்சர் மெய்யநாதன் தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரிய கருத்தரங்கில் ஏற்றார். தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம், மத்திய சுற்றுசூழல் மாறும் காலநிலை மாற்று அமைச்சகம் சார்பாக ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்று பொருட்களை உற்பத்தி செய்வது குறித்த 2 நாள் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது. இந்த கருத்தரங்கை ஒன்றிய அமைச்சர் புபேந்தர் சிங் யாதவ் காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.

இதில், அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தலைமை  வகித்து அனைவருக்கும் மஞ்சள் பை வழங்கி பேசியதாவது: பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மாற்றாக வேறு பொருட்களை பயன்படுத்துவதற்கான முதல் கண்காட்சி இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் நடக்கிறது. புவி வெப்பமயமாதல், காலநிலை மாற்றம், போன்றவற்றில் பிளாஸ்டிக் பங்களிப்பும் இருக்கிறது. ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக வேறு பொருட்களை பயன்படுத்த வேண்டும். 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனால், 1074 தொழிற்சாலைகள் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்துள்ளன.  

கோயம்பேடு மார்க்கெட்டில் வீணாகும் காய்கறிகளை கொண்டு மின்சாரம் தயாரிக்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 25 பள்ளிகளை பசுமை பள்ளிகளாக மாற்றவும் உள்ளோம். ஐ.ஐ.டி., அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆவின் நெகிழிப் பைகளுக்கு மாற்றாக மக்கும் தன்மை கொண்ட பைகளை பயன்படுத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்படுகிறது.  174 பிளாஸ்டிக் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மூடப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சுற்றுசூழல், காலநிலை மாற்றம் மற்றும் வளத்துறை  கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹு,மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Related Stories: