திருமூர்த்திமலை, தாராபுரம் அமராவதி ஆற்றில் மகாளய அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம்

உடுமலை : புரட்டாசி  மாத மகாளய அமாவாசை தினத்தன்று தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால்  அமாவாசையையொட்டி, தீமைகள் விலகி நன்மைகள் பிறக்கும் என்பதால், நேற்று  காலை முதல் நூற்றுக்கணக்கான மக்கள் குடும்பத்தினருடன் திருமூர்த்தி மலை  மீதுள்ள பாலாற்றின் கரையில் திரண்டனர். அங்கு புரோகிதர்கள் மூலமாக  தங்களின் முன்னோர்களுக்கு பிண்டம் வைத்து, தர்ப்பணம், திதி  கொடுத்தனர். தோஷ நிவர்த்தி பரிகாரம், முன்னோர்கள் செய்த பாவம் மற்றும் சாப  தோஷம் உள்ளிட்ட தோஷ நிவர்த்தி பரிகாரங்கள் செய்து பக்தர்கள் வழிபட்டனர்.

 பின்னர் பஞ்சலிங்க அருவி, பாலாற்றில் புனித நீராடி அமணலிங்கேஸ்வரர்  கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். கோயிலில் கூட்டத்தைக்  கட்டுப்படுத்தும் விதமாக பொது தரிசனத்திற்கும், சிறப்பு தரிசனத்திற்கும் என  தனித்தனியே பக்தர்கள் வரிசையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில்  பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய  மும்மூர்த்திகளை வழிபட்டனர். கோயிலை சுற்றிலும் தளி பேரூராட்சி நிர்வாகம்  சார்பில் துப்புரவு, சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

பஞ்சலிங்க  அருவி பகுதியில் உள்ள 5 லிங்கங்களுக்கு சிறப்பு அபிசேகம், ஆராதனை நடந்தது.  இதேபோல், கொழுமம், மடத்துக்குளம், கணியூர், சங்கராமநல்லூர் ஆகிய இடங்களில்  அமராவதி ஆற்றங்கரையில் ஏராளமானோர் திரண்டு திதி கொடுத்தனர். உடுமலையில்  இருந்து திருமூர்த்தி மலை செல்லும் பேருந்துகளில் பயணிகள் கூட்டம்  அதிகளவில் இருந்தது.தாராபுரம் : திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மற்றும் அதன்  சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மறைந்த தங்களது  முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் கொடுக்க தாராபுரம் அமராவதி ஆற்றில் நேற்று அதிகாலை முதல் குவிந்தனர்.  பிண்டத்தால் முன்னோர்களை நினைத்து வேத மந்திரங்கள் முழங்க உருண்டைகளாக  பிடித்து வைக்கப்பட்ட பிண்டங்களை அமராவதி ஆற்றில் கரைத்தனர். இதில் தாராபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராம  பகுதிகளில் இருந்தும் 1000க்கும் மேற்பட்டோர் தங்கள் முன்னோர்களுக்காக  தர்ப்பணம் செய்தனர்.

Related Stories: