சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்: சட்டப்பேரவையை கூட்டுவது குறித்து ஆலோசனை

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. அதில் அடுத்த மாதம் கூட உள்ள சட்டப்பேரவையில் என்னென்ன மசோதாக்களை வைப்பது என்பது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்படுகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை காலை 9.30 மணியளவில் அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. இதில் அனைத்து துறை அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். கூட்டத்தில், தமிழகத்தின் நலன் சார்ந்த பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் புதிய தொழில்களுக்கான அனுமதி உள்ளிட்ட பல்வேறு கொள்கை முடிவுகள் சம்பந்தமாகவும் முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.  மேலும், அடுத்த மாதம் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டம் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.

சட்டப்பேரவை கூட்டத்தில் என்னென்ன சட்ட மசோதாக்களை தாக்கல் செய்வது, வைக்கப்பட வேண்டிய அறிவிப்புகள், விசாரணை அறிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. அது மட்டுமல்லாமல் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது மற்றும் முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. தமிழக சட்டப்பேரவை கூட்டம் அடுத்த மாதம் 2வது வாரத்தில் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை  தாக்கல் செய்யப்பட உள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான அறிக்கையும் பேரவையில் வைக்கப்படும். ஸ்மார்ட் சிட்டி முறைகேடு தொடர்பான அறிக்கை மற்றும் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை போன்ற அவசர சட்டங்களும் தாக்கலாக அதிக வாய்ப்புள்ளது. இதனால், அடுத்த மாதம் தொடங்க உள்ள சட்டப்பேரவை கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

*கலைவாணர் அரங்கத்தில் வடகிழக்கு பருவமழை ஆலோசனை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இந்நிலையில் வடகிழக்கு  பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் 26ம் தேதி காலை 10.30 மணியளவில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, வருவாய் துறை, பொதுப்பணித் துறை, நகராட்சித் துறை உள்ளிட்ட முக்கிய துறை அமைச்சர்கள், துறை சார்ந்த செயலாளர்கள், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உள்பட உயர் அதிகாரிகள் பங்கேற்க  உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது எப்படி, பருவமழையை சந்திக்கும் வகையில் எந்தவிதமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்க உள்ளார். அதே நேரத்தில் பருவமழையை எதிர் கொள்ளும் வகையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு உள்ளது.

Related Stories: