மதுரையில் உள்ள விடுதியில் பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்து டாக்டருக்கு அனுப்பிய பி.எட். மாணவி: 2 பேர் கைது

மதுரை: மதுரையில் விடுதியில் தங்கியுள்ள பெண்கள் குளிப்பதை போட்டோ மற்றும் வீடியோ எடுத்து டாக்டருக்கு அனுப்பிய பி.எட். மாணவி மற்றும் டாக்டரை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி முஸ்லிம் தெருவைச் சேர்ந்தவர் காளீஸ்வரி(31). இவர் மதுரை அண்ணாநகரில் உள்ள ஒரு தனியார் மகளிர் விடுதியில் தங்கி, மதுரையில் உள்ள பி.எட். கல்லூரியில் படித்து வருகிறார். இவருக்கும் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த டாக்டர் ஆசிக் என்பவருக்கும் பழக்கம் இருந்தது. ஆசிக், கமுதி பள்ளிவாசல் தெருவில் கிளினிக் வைத்துள்ளார். காளீஸ்வரி தினமும் வாட்ஸ் ஆப் மூலம் பல்வேறு தகவல்கள் மற்றும் புகைப்படங்களை ஆசிக்குக்கு அனுப்பி வந்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன் காளீஸ்வரியுடன் தங்கியிருந்த ஒரு பெண், காளீஸ்வரியின் செல்போனை பார்த்தபோது அவரது செல்போனில் பல ஆபாச படங்கள் இருந்துள்ளன. இதே விடுதியில் தங்கியுள்ள மற்ற மாணவிகள் மற்றும் பெண்கள் குளிக்கும் காட்சிகளும் உடை மாற்றும் போதும் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இருந்ததாக தெரிகிறது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண், விடுதி காப்பாளர் ஜனனியிடம் தெரிவித்து, அந்த செல்போனையும் அவரிடம் ஒப்படைத்துள்ளார்.

இதையடுத்து காப்பாளர் ஜனனி கொடுத்த தகவல்படி, அண்ணாநகர் போலீசார் விடுதிக்கு வந்து காளீஸ்வரி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். காளீஸ்வரி செல்போனுடன் மதுரை சைபர் க்ரைம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில், விடுதியில் தங்கியுள்ள சக பெண்கள் குளிக்கும் போதும் உடை மாற்றும் போதும் அதை தனது செல்போனில் போட்டோ, வீடியோ எடுத்து அதை காளீஸ்வரி கமுதியில் உள்ள டாக்டர் ஆசிக்குக்கு அனுப்பி வைத்திருப்பது தெரிந்தது.

இதையடுத்து சைபர் க்ரைம் போலீசார் காளீஸ்வரி, ஆசிக் ஆகியோரை கைது செய்தனர். காளீஸ்வரி பயன்படுத்திய செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து விடுதி காப்பாளர் ஜனனி மற்றும் விடுதியில் தங்கியுள்ள பெண்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

Related Stories: